Wednesday, May 26, 2010

வால்பாறையில் ஆங்கிலேயர்கள் கட்டிய பாலமும், நானும்..




வால்பாறையில் ஆங்கிலேயர்கள் கட்டிய பாலமும், நானும்..

எண்ணத்தின் வேர்களில் பல விடயங்கள் தங்கிவிடுவதுண்டு..பலமுறை எனது கருத்துக்களை பதிவு செய்ய எண்ணி ,சக நண்பர்களின் பதிவு போதுமென்று இருந்துவிடுகிறேன் நான் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களில்.

இன்று காலை நண்பர் ராசா தொடர்பு கொண்டார்.. பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பின்னர்," மேடம், வால்பாறைக்கு சுற்றுலா சென்று வந்தேன்" என்றார்.. அந்த மலை வாசமும்,கூந்தல் கோதிய வெண்பஞ்சு மேகங்களும், மரணபயம் காட்டிய மரப்பாலமும் காட்சிகளாய் கண்களில் விரிய," மரப்பாலம் தாண்டி கல்லார் அருவிக்கு போனீர்களா? என்று கேட்டேன். " இல்லை மேடம், ரெண்டு பேறு அந்த பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்துட்டாங்களாம். அதுனால அந்த பாலத்த மூடிட்டாங்க, பார்க்க முடியலங்க " என்றார்.அதிர்ந்து போனேன்..வால்பாறை பாலம் பற்றி நிச்சயம் எழுத முடிவு செய்தேன்.

படைப்பாளிகள்,விமர்சகர்கள் என ஒரு நண்பர்கள் குழு சென்ற வருடம் வால்பாறையில் கூடினோம்.அது குறித்து பல கருத்துக்கள் ,விமர்சனங்கள் எழுந்தது. அது பற்றி பல செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. என்றாலும் .தோழி தமிழ்நதி நிகழ்வு குறித்து மிக விபரமாக அவரது வலைப்பூவில் பதிவு செய்திருந்தார்.. அதை எனது வலைப்பூவில் இணைத்திருந்தேன். அத்துடன் வால்பாறை நிகழ்வு பற்றி மறந்து போனாலும் ,அங்கு அருவி அருகே செல்ல நடந்த பிரயத்தனங்கள் அந்த பாலம் பற்றிய விடயங்களை பலருடன் பகிர்ந்துகொண்டேன்..

எங்கள் வால்பாறை சந்திப்பில், நதியோரம், அருவியோரம் என விமர்சனகூட்டதை நடத்த எண்ணியதை தொடர்ந்து எங்களோடு வந்த சக படைப்பாளியின் நண்பர் சின்னக்கல்லார் அருவிக்கு போகலாம் என்றார் .அதை தொடர்ந்து அனைவரும் குதுகூலத்துடன் அருவி நோக்கி கிளம்பினோம்.

குற்றாலம் போல வண்டி நிறுத்திய இடத்தின் அருகே அருவி இருக்குமென்ற மிக பெரிய நம்பிக்கையுடன், (??) அவர்களோடு நானும் இணைந்துகொண்டேன். வாகனத்தில் இருந்து இறங்கியவுடன், நடக்கதொடன்கினோம் . சில் வண்டின் ரீங்காரமும், அருவியின் உல்லாச கூக்குரலும் என்னை குழந்தையாக மாற்றிவிட்டது..சற்று நேரத்தில் ஒத்தையடி பாதையும் அடர்ந்த வணமுமாக ,நீண்டு கொண்டே போனது . ஒருமணிநேரமும் நடந்து சென்ற பினரும் முடியாத பாதை கண்டு சோர்ந்துபோனேன்.. சற்று முன்னர்வரை உல்லாச கூக்குரலாக கேட்ட அருவியின் சத்தமும் ,வணத்தின் கணத்த அமைதியும் பயத்தை கொடுத்தது. ஊனமுற்ற வலது கால் என்னோடு ஒத்துழைக்க மறுத்தது.

' நான் வண்டிக்கு திரும்பி போய் விடுகிறேன், நீங்கள் செல்லுங்கள் என்று என்னுடன் வந்தவர்களிடம் கூறினேன். பாம்பு பூச்சி, சிறுத்தை எல்லாம் வருமாம். நீங்கள் தனியாக போக வேண்டாமென எச்சரிக்கப்படேன்.. என்னடா இது சோதனை, புத்தகம் எழுதிய படைப்பாளி கூட நிச்சயம் இத்தனை கஷ்டப்படிருப்பர்களா என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே நான் எனது வலது காலையும் கூடிக்கொண்டு செல்ல , பணப்பையை முன்னிரவு தொலைத்து விட்டதை சொல்லி புலம்பிக்கொண்டே
வந்தார் முஜுபுர்.

சில நிமிட நடையில் அப்படி ஒரு அபாயம் இருக்குமென யாரும் எதிர்பார்க்காவில்லை. ஆங்கில படங்களில் பார்ப்பது போன்ற உடைந்து, சிதைந்த ஒரு புராதான மரப்பாலம் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் கட்டிய மரப்பாலம்மாம் அது.

சிலர் உற்சாகமாய் சாகச குரல் எழுப்ப, பலர் யோசிக்க, என்னை போல சிலர் அதிர்ந்தே போய்விட்டார்கள். இடம் அறிந்து வந்திருக்க வேண்டும், தூரமும் தெரியவில்லை, இதில் எப்படி போவது என்று பல குரல்கள் .

பாலத்தின் நுழை வாயில் மட்டும் இரண்டு படிகள். இருந்தது.அதை தொடர்ந்து பக்கவாட்டில் இரும்பு கயிறும்,கீழே உருட்டு கட்டைகள் அடுக்கி அதன் மீது பலகை போடப்பட்டிருந்தது. பல இடங்களில் பலகை உடைந்திருக்க, பல இடங்களில் உருட்டு கட்டைகளை காணவில்லை. இருவர் சென்றால் பாலம் ஊஞ்சல் போல ஆடியது.. இருபது அடி உயர்த்தி இருந்தது உடைந்த அந்த புராதான பாலம்.

கீழே தண்ணீர் நுரைத்து சுளித்துகொண்டு ஓடியது. பெரும் பெரும் பாறைகள் பாசி படிந்து கிடந்தது. பாலதில்ருந்து விழுந்தால் , நீச்சல் தெரியாது என்பது வேறு விடயம். தலை பாறையில் மோதினால் , பிறகு நீச்சல் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன? பின் வருபவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் பலர் அருவி அருகே போய் விட,சிலர் பொறுப்பாய் பயந்தவர்களை கூட்டிச்சென்றார்கள்.

பாலத்திலிருந்து விழுந்து அடிபடுவதை விட ( சாவதை விடவும்) பூச்சி , சிறுத்தை வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்த அந்த படியில் உட்க்கார்ந்து கொள்ளலாமென முடிவு செய்தேன் நான் . தோழர் கம்பீரன்,காந்தி, நரன், மார்க்ஸ், சுகிர்தா, (பயத்தில் நான் கவனிக்க ,அல்லது பெயர் மறந்த சிலர் ) கண்டிப்பாக நான் போய் விடலாமென தைரியம் கூற, தோழர் செல்மாவின் நண்பர் கருணாகரன், அட வாங்கப்பா இன்பா,,மிஞ்சி போனால் மரணம் தானே என்று என்னை இழுத்துக்கொண்டு நடக்க துவங்க,(எதற்காய் இப்படி ஒரு பயணம் ) நான் ஒரு அடி எடுத்து வைக்க காலுக்கீழ் உருண்டது உருட்டு கட்டைகள்.மனசு பயத்தில் கதற, கீழே சுளித்துகொண்டு ஓடும் தண்ணீர் வேகத்தை விட வேகமாக ஓடியது எனது இரத்தம். அருவியின் சப்தத்தை விட வேகமாக கேட்டது எனது இதய துடிப்பு.

மிக ஒல்லியாக இருந்த மஞ்சு என் பக்க வாட்டில் வர, கயிற்றின் மீது நடக்கும் கூத்தாடி போல ஒரு வழியாக பாலத்தை கடந்து போய் இறங்கியவுடன், இவ்ளோதான், இதுக்கு போய் பயந்திங்களே என்று பலர் சொல்ல, திரும்பி பார்த்தால் ராஜன் குரே முகம் சிவக்க பாலத்தில் வந்து கொண்டிருந்தார். காந்தி, கம்பீரன், நரன் என பலர் அனைவரும் வரும் வரை பார்த்துகொண்டிருந்தார்கள்.

சரி, அருவி வந்துவிட்டது என நினைத்து முன்னேற எத்தனிக்கையில், மிக பெரிய வழுக்கு பாறையில் பிடிமானமின்றி நாலு காலால் தாவி கொண்டிருந்தனர் பலர். பல்லி போல பாறையை ஒட்டியபடி தவழ்ந்து மேலேறினர் சிலர்.. மிரண்டு போனோம் பலர்.

காந்தி போய் ஒரு மாற்று பாதை பார்த்து வர,பலர் அந்த பாதையில் சென்றோம்..ஒரு வழியாக மேலே சென்று அருவியை கண்டபொழுது மீண்டும் அந்த சுகம் வந்து மனசில் உட்கார்ந்தது...

அருவியிலிருந்து ஓடும் நீரில் கால் நனைய நீரில் அமர்ந்த பொழுது ஒரு ஜென்மம் அங்கு வாழ்ந்தது போல இருந்தது. அங்கு திரிந்த மந்திகளின் உற்சாகம் என்னிடமும் கொஞ்ச நேரம் தொற்றிக்கொண்டது.

ஒரு புறம் விமர்சனகூட்டம் தொடங்கியது. யாழன் புகைப்படமெடுத்து கொண்டிருந்தார்.
அனைவரும் வந்து சேர்ந்து கூட்டம் தொடங்கிய பொழுதே ,மூன்று மணிக்கு தண்ணி திறந்து விடுவோம். நீங்க இருக்குமிடமெல்லாம் நீர் வந்து விடும்மென வன அதிகாரி
ஒருவர் கூற, பாக்கி இருந்த விமர்சனங்களை தங்குமிடத்தில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது...

மீண்டும் அந்த வழுக்கு பாறை, பாலத்தில் ஒரு பயணமா? கண்டிப்பாக முடியாது என தோன்றியது.

பாலத்திலிருந்து விழுவது தானே உங்க பயம், வேறு மார்க்கம் பார்கிறேன் என்று காந்தி கூறி பாலத்திற்கு கீழே தண்ணீரில் நடந்து அந்த பாதையை கண்டு வந்தார்.

பாலம் குறித்தான பயம் உள்ளவர்கள் நீரில் கடப்பது என்று முடிவானது..காந்தி என்னை அழைத்து செல்வதாய் கூறினார். ஐந்தாண்டு திட்டம் போல திட்டம் தீட்டினோம்.. அவர் கால் வைக்கும் பாறையை பார்த்து நான் கால் வைக்கவேண்டும், வேறு எங்கும் பார்க்க கூடாது, என்று எனக்கு சொல்லப்பட்டது.எனது கையை பிடித்து கொண்டார் காந்தி.

பாசி படர்ந்து வழுக்கும் அந்த பாறைகளை பார்த்துக்கொண்டே தண்ணீரில் இறங்கினேன். ராஜன் குரே நெஞ்சளவு நீரில் தடுமாற, கைபேசிகள் தண்ணீரில் தவற விட்ட சுகிர்தா தண்ணீரில் கைபேசியை தேட, எதையும் பார்க்காமல் வாங்க என காந்தி கூறியதை தொடர்ந்து நடக்க தொடங்கினேன்.

நாங்கள் சென்ற பாதை என் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருந்தது.பல இடங்கள் வழுக்க ,சமாளித்து கரையேறி விட்டோம்.

தண்ணீரில் மிக கஷடப்பட்டவர்கள் பாலத்திலேயே போயிருக்கலாமோவென பேசிகொண்டார்கள். மீண்டும் நீண்ட தூரம் நடக்க வேண்டுமென்று உணர்ந்தாலும் இம்முறை அந்த கஷ்டம் தெரியவில்லை.

நடந்து சென்று வண்டி ஏறும்பொழுது உடைகள் காய்ந்து விட்டிருந்தது .நாங்கள் போய் வண்டியில் ஏற, இருக்கயின்றி,சுகிர்தா , மஞ்சு, காந்தி, இசை, நரன்,ஆகியோர் படியில் அமர, நானும், ராஜன் குறேவும் பக்கத்தில் உள்ள இருக்கைகளில் அமரவேண்டியிருந்ததது . ரெண்டு குண்டு ஒரே இடத்திலா என்று நான் கேட்டக்க, குண்டு சத்தமே வேண்டாமென்று இங்கு வந்தால் இங்கும் ரெண்டு குண்டா என தமிழ்நதி கேட்க்க கால் வலியை கடந்தது சிரிப்பு ஒலி..

அந்த மரண பாலம் நிச்சயம் காவு வாங்கும் என்ற எனது எண்ணம் நிஜமாகி போனது கொடுமை !!

வன பாதுகாப்பு அதிகாரிகள் இதை ஏன் முனரே சரி செய்திருக்க கூடாது?? இழப்பிற்கு பின்னரே பாலம் மூடப்படுவது ஏன்? இந்த உயிர் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?

Tuesday, May 25, 2010

தோழர் இன்குலாப் அவர்களின் மினஞ்சல்

From: sahul hameed sks
Date: 2010/5/12
Subject: Re: பூமி தின்னி / இன்பா
To: rama inba



அன்புத் தோழரே இன்பா,

இப்பொழுதுதான் தங்கள் கருத்த நட்சத்திரங்கள் என் வெளியில் ராசிகளை வரைந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

காலத்தின் கண்ணாடியில் தகிக்கும்இவ்விரண்டு கவிதைகளும் சுடர் முகங்கள் காட்டும்போராடும் மானுடம் உம பாடலை இசைத்தபடி களம் செல்லும்.
என்வெளி அதிர உங்கள் எழுத்துகள் இறங்குவதாக.

தோழமையுடன்
inqulab.

Sunday, May 23, 2010

சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை


சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை என்று குரல் எழுப்பும் பாறிபா முஹஜெர் என்ற பத்திரிகையாளர் பட்ட கஷ்டங்கள் தான் இன்று ஈரானிய பெண்களின் பிரச்சனைகளை உலகுக்கு கொண்டுவந்துள்ளது.

புது தில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெஹ்ரன் விமான நிலையத்திற்கு வந்த தளத் தகினியா , மந்ஸௌரெஹ் ஷோஜாயி, ப்ஹர்நாஸ்,என்ற மூன்று பெண் பத்திரிகையாளர்கள்,விமான
நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

பெண் சுதந்திரம், சட்ட பாதுகாப்பு,விவாகரத்து கோர உரிமை கோரல்,குழந்தையின் பாதுகாப்பு கோரல், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்த படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக பல பெண்கள் கைது செயபடுவது சர்வ சாதாரண விடயாமகிபோனது இரானில். கைது செயப்படும் பெண்கள் காணமல் போவதும்,தூக்கில் போடபடுவதும் அதிகரித்துவிட்டது.ஒரு குற்றம் நடந்தால் அந்த குற்றத்திற்கு சாட்சியாக ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால்,ஆணின் சாட்சி மட்டுமே நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஷேக்ஹோலேச்லம் என்ற பெண் "அசர் மேகார் ' என்ற பெண்கள் அமைப்பை நடதியதர்க்காய் கைது செய்பட்டு மூன்று வருடம் கடுங்காவலில் வைக்கப்பட்டார். பலர் வெளிநாடுகல்லுக்கு தப்பி அடைக்கலம் அடைந்துள்ளனர்.

ஷேக்ஹோலேச்லம்,ஜெல்வெஹ் ஜாவேரி, மரியம் ஆகிய மூன்று பெண்களும், விசாரயின்றி சிறையில் வாடும் பெண்களை விடுதலை செய்யக்கோரி ஒரு கோடி கையெழுத்து பெரும் முயற்சியில் உள்ளனர்.

நடத்தை தவறியதாக குற்றம் சாட்டப்படும் பெண்கள் பொது மக்கள் முனிலையில் கல் எரிந்து கொலை செய்யபடுவதையை கண்டித்து பலர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தை கலைக்க மிளகு பொடி கரைசல் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சிவப்பு நிற பெயின்ட்டை அடித்தும் கலைக்கப்பட்டனர்.அமைப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு கண்கள் கட்டப்பட்டு,எந்த இடத்தில இருகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் வைக்கப்பட்டனர்.

இப்படி விசாரணையின்றி வாடும் பெண்கள் சோகம் ஒரு வகையென்றால் ,தூக்கில் போடப்படும் பெண்களின் நிலை மிக கொடுமையாக ,எவரையும் கலங்கடிக்கும் விதமாக உள்ளது..

ஒரு தந்தை தன மகளை எழுபது வயது நிரம்பிய கிழவனுக்கு மணமுடிக்க உரிமை உள்ளது. அதை அந்த பெண் குழந்தையின் தாய் தடுத்தால் அவளுக்கு தண்டனை உண்டு. மனைவியாக நாலு பெண்களையும்,வைப்பாட்டியாக பல பெண்களையும் வைத்துகொள்ள சட்டம் உதவுகிறது.

ஒரு விபத்தில் கணவனும் மனைவியும் அடிபட்டால் கணவனுக்கு கிடைக்கும் நஷ்ட ஈட்டு தொகையில் பாதி தான் அந்த பெண்ணுக்கு தரபடுகிறது.

இஸ்லாமிய பீனல் கோட் அறுநூத்தி பத்து சட்டம் மிக கடுமையாக பெண்களை பாதிக்கிறது. இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இன்னும் நாலு வருட தண்டனை முடிந்து வெளியே வரவில்லை.பரீபா எழுதிய நூல்கள் தடை செய்யப்பட்டுவிட்டன.

சூசன் என்ற பெண்மணி, மிக பெரிய பதவியில் அமெரிக்க நிறுவனித்தில் வேலை பார்த்தார். இவர் இரானிய நாட்டின் நடப்புகள் மற்றும் கொடுமையான சட்டங்களை வெளிஉலகுக்கு சொல்லும் விதமாக ஒரு வலைப்பூ தொடகினார். அதற்காக கைது செய்யப்பட்டு, அவர் வீட்டில் அவர் பிள்ளைகள் முன்பாக கடுமையாக அடிக்கப்பட்டார். அவரது கணினி,மற்று அவரது உடமைகளையும் எடுத்து சென்றது காவல் துறை.
முன்னணி பத்திரிகையாளரும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவருமான பாரீபா இன்றும் நாடு திரும்ப அஞ்சி வெளி நாட்டிலேயே தஞ்சமடைந்துள்ளார்.நாடு திரும்பினால் கைது செயபடுவது நிச்சயம் என்ற அச்சத்தில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்..

இரானிய சட்டத்தில், பெண் ஒன்பது வயதானாலே தவறு செய்தால் தண்டிக்க படுவாள்.வீட்டில் நடக்கும் தவறுகளுக்கு அதிக பட்சமாக பத்து வருட தண்டனை வழங்கப்படும்.நாட்டின் சட்டத்தை மதிக்காவிட்டலோ,அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டாலோ, உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்படும்.

சிறுமிகள் காதலித்தாலோ,திருமணதிற்கு முன் உடலுறவு கொண்டாலோ,கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.இஸ்லாமிய சட்டத்தை மீற முயல்வதாக கூறி தூக்கிலிடப்பட்டால் சிறுமி அட்டேபா.

"அவளுக்கு நாளை மரண தண்டனை “
“அதற்கென்ன …நிறைவேற்று”
“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”
“ஓ… அப்படியா… அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளைக் கெடுத்து விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம் “
இது உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானின் சிறைகளின் சுவர்களும், அங்கே எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.

ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது. மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள்.

இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!

இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.
எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன். சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோ, அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

பாசிஜ் குழு வில் எக்கச்சக்க சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டு”த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான். என்றவர் தொடர்கிறார்.எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன்.பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.

கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.

கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.

இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து கெடுக்கும்” பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள், தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு என கவலையுடன் முடிக்கிறார் அவர்.

மனித உரிமை மீறல் நடக்கும் இந்த விடயங்களை பார்த்து சேகரித்து நடவடிக்கை எடுக்க போவதாக கூறும் மனித உரிமை கழகம் (?) எப்போது நடவடிக்கை எடுக்கும்?? பத்திரிக்கை சுதந்திரம் வேண்டாம்..சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அது எமது பிறப்புரிமை ,என்ற இவர்களது குரல் எங்கும் ஒலித்து கேட்டக்க வேண்டியவர்கள் காதுக்கு போகுமா?



Chikky mukki.com ,feb issue 2010

Tuesday, May 11, 2010

தொல் மரபி

தொல் மரபி


வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.

இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே



உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..

யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...

அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..

இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.

உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்

இவுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்

அந்திமழை

மரங்களிலிருந்து
செடியிலிருந்து
கொடியிலிருந்து
மலர்ந்துகொண்டே
இருக்கின்றான் மலர்கள்

பிறந்து கொண்டே
இருக்கும் உலகம்
வெவ்வேறு கருவறையிலிருந்து

***** ***** ***** *****

உன் பிரார்த்தனைக்கான
மலர்களை தினமும்
என் தோட்டத்திலிருந்து
கொய்கிறாய்

உன் பிரார்த்தனைக்கான
வார்த்தைகளைக்கூட
என்னிடமிருந்தே
இரவல் வாங்குகிறாய்

உன் பிரார்த்தனை
முழுவதுமாய்
என்னையே முணுமுணுக்கிறாய்

பின்னொரு நாள்
என் தோட்டத்திலிருந்த
இறுதி மலரையும்
பறித்து போனாய்.

***** ***** ***** *****

உன்னைவிட்டு நான்
அல்லது
என்னை விட்டு நீ
விலகிப் போகும்
நாளொன்றில்
தத்தம் நினைவுகளோடு
பயணிக்கிறோம்

போகும் பாதையின்
ஓரங்களில்
கடந்து போய்கொண்டிருக்கிறது
கருவேல மரங்கள்

***** ***** ***** *****

பற்றி எரியும்
மூங்கில் காடு
சுழன்றடிக்கும்
பெருங்காற்றில்
வாசித்துக் கொண்டிருக்கிறது
தனக்கான துயரகீதத்தை
கருகி கிடக்கும்
புல்லாங்குழளினூடாக

***** ***** ***** *****

புதைவதுதான்
வாழ்வென்பது
தெரியாதெனக்கு
தியானத்தில்
புத்தகத்தில்
காதலில்
உறவுகளில்
புதைவதுதான்
மரணமென்பதும்
தெரியாதெனக்கு

***** ***** ***** *****

பாதங்களை
தொடர்ந்தபடி இருக்கின்றன
கரைகள்
தடயமற்றுச் செல்ல
நீருக்குள் இறங்கி நடக்கிறாய்
போ..
கரையேறிச் செல்கையில்
என் உருவம் கண்டு
திகைப்பின் ஆழத்திற்குள்...

***** ***** ***** *****

என்னிலிருந்து மீண்டு
உயரே பறக்கிறாய்
ஒரு பறவையென
வெகு தொலைவிற்கு
உதிர்ந்து விழும்
உன் சிறு நினைவுகளை எடுத்து
ஒளித்து வைக்கிறேன்
அனுமதிக்கப்பட்டு விட்டோம்
வெவ்வேறு காலங்களுக்கு...

***** ***** ***** *****

நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில் இறங்கி
நடக்கத் துவங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்

Saturday, May 1, 2010

வெவ்வேறு உலகம்

நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில்
இறங்கி
நடக்கதொடங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்.