Saturday, November 1, 2008

வலிய பாயும் இருள் (வினையும் எதிர் வினையும் )

உயிர்மை யின் இணைய இதழான உயிரோசை 7 வது இதழில் வெளியான திரு .பவித்ரனின் கட்டுரையும் அதற்கான என் எதிர்வினையும் .(எதிர்வினை இதழ் .9 ல்கருத்துக்கள் பகுதியில் வெளியாகியுள்ளது )

வினை:(உயிரோசை இதழ் :7)
பவித்ரன் :வாழ்க்கையைத் தொலைக்கும் வாழ்ந்து கெட்டவர்கள்
அந்த இளைஞர் அடிப்படையில் ஒரு அஞ்சல்தலை சேகரிப்பாளர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமையே ஒரு அஞ்சல்தலைக் கண்காட்சியில் அங்கும் இங்கும் நகரவிடாமல் விளக்கி அன்புத் தொந்தரவுக்குள்ளாக்கியவர். இணையப் பத்திரிகையொன்றின் சார்பாக பழங்கால வீடுகளை ஆவணப்படுத்தும் கட்டுரையொன்றிற்காக அவரைச் சந்திக்க சிந்தாதிரிப்பேட்டையில் அவரது 'ஹெரிடேஜ்' வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரது முதிர் கன்னியான சகோதரி மற்றும் தாயார் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அந்த மூன்று பேரும் அரண்மனை போலிருந்த அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். ஓயாமல் எதற்கெடுத்தாலும் பேசிக் கொண்டே இருந்தார்கள். என்னை ஒரு போதும் அவர்கள் மௌனமாக அந்த வீட்டின் அமைப்பைக் கவனிக்கவிடவில்லை. வலுக்கட்டாயமாக விளக்கமும் அளித்துக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறைகளும் செட்டி நாட்டுப் பாணியில் விசாலமானவை. அந்த வீட்டின் தேக்கு மரத் தூண்கள் ஒவ்வொன்றும் பல இலட்சங்கள் பெறுமானவை. அத்தனை வசதிகள் இருந்தும் அவர்கள் மூவரின் கண்களிலும் வேட்டியில் படிந்த வாழைக்கறை போல அடர்த்தியாக வெறுமை படர்ந்திருந்தது. சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள அந்த வீட்டின் மதிப்பே பல கோடி ரூபாய் பெறுமானது. இருந்தும் அந்த வீட்டில் வறுமை தாண்டவமாடியது. ஆனால் அவர் சேகரிப்பில் ஒரு ரூபாய் நோட்டு முதல் ஐநூறு ரூபாய் நோட்டு வரையான சேகரிப்புகள் கட்டுக்கட்டாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரது அப்பா மற்றும் தாத்தா பற்றியெல்லாம் நான் கேட்காமலேயே கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பழம்பெருமை பேசிப் பேசியே தங்களுக்குள் தங்களை அடையாளம் கண்டு அவர்கள் வெறுமையாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்ந்து கெட்டவர்களின் வலியும் வாழ்வும் புரிபடத் துவங்கிய தருணம் அது. ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் வாழ்வும் வலியும் என்றே இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்கிற கோபமும் எழுந்தது.
தாமோதரன் நாட்டுக் கோட்டை செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். தொல்காப்பியத்தில் சொல்லப்படும் 'முந்நீர் வழக்கத்திற்காக' கடல் கடந்து சென்ற தமிழ்ச் சமூகத்தின் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர். ஆனால் இந்த வரலாற்றுப் பெருமையை விட்டுவிட்டு அவரால் இந்த இயல்பு உலகத்திற்கு வரமுடியவில்லை. நிலையான வேலை குறித்த அல்லது சொந்தமாக ஒரு பெட்டிக் கடையாவது போடுவது பற்றிய எந்தவித யோசனைகளும் இல்லாமல் இருந்தார். யோசனைகளைப் புறக்கணிக்கும் மனநிலையிலும் இருந்தார். சேகரிப்பில் பணத்தைக் காட்சிக்கு வைக்க முடிந்த அவரால் தங்கள் குடும்பத்திற்கான நல்வாழ்வை அமைத்துக் கொள்ளப் பணத்தைச் செலவழிக்க முடியவில்லை. ஏன் என்று நான் அவரிடம் கேட்டேன். வேறு வேறு விளக்கங்களை அவரால் கொடுக்க முடிந்ததே தவிர, என்னுடைய கேள்விக்கு நேரடியான பதிலை அவரால் தரமுடியவில்லை. வாழ்ந்து கெட்டவர்களுக்குத் தேவையான ஏதோவொரு அடையாளம் அவருக்குத் தேவைப்பட்டிருக்கிறது. அது அஞ்சல்தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்பு. வறுமையை விரட்ட அந்த வீட்டை விற்றுவிட்டு அவரால் கை நிறைய பணத்துடன் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்க முடியும். 'பழம்பெருமை', 'கலாசாரம்' பேசியபடி அவர் தங்களது பழைய வாழ்வு குறித்த கனவுலகில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருந்தார். தமிழர்கள் தங்களது பெருமையாகச் சொல்லப்பட்டு வரும் சாதிய படிநிலைகள் சிதறிக் கொண்டிருப்பதைக் காட்டும் ஒரு உதாரணமாகவே இந்த தாமோதரனைப் பார்க்க முடிகிறது. வணிகச் சாதியாக அறியப்பட்ட நாட்டுக் கோட்டை செட்டியார் இனத்தைச் சேர்ந்த இன்னொரு நண்பனும் என்னுடன் பணியாற்றினான். காரைக்குடியில் அவனுக்கும் கடல் போல் வீடு இருக்கிறது. ஆனால் அவனது அக்காவின் திருமணத்திற்காக பணம் கடன் வாங்கச் சென்னைத் தெருக்களில் நாய் போல் அலைந்தான். அவனது பழம்பெருமை அந்த வீட்டை விற்பதற்கு மனத் தடையாக இருந்தது. கிட்டத்தட்ட நாட்டுக் கோட்டை செட்டியார்களைப் போலவேயான பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்த பல நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அந்தச் சமூகமும் பழம்பெருமைகளில் இருந்து இன்னும் விடுபடவில்லை. ஒரு காலத்தில் பிள்ளை பட்டம் பெருவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. ஆனால் இந்தச் சமூகம் இன்றைக்கு தனது பழைய சமூக வாழ்வையும் தொலைத்துவிட்டு, அரசாங்க உத்தியோகத்திற்கான வாய்ப்புகளையும் தொலைத்துவிட்டு உபரி வேலைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
நவீனப் பொருளாதார உலகில் போட்டியிட வேண்டிய தேவையை முனைப்பை இந்த இரண்டு சாதிகளில் இருக்கும் இளைஞர்களும் இழந்து விட்டனர். ஒரு காலத்தில் தங்களுக்கு இருந்த செல்வாக்கு, கௌரவம் குறித்த கனவுகளுடன் தாழ்வு மனப்பான்மை சார்ந்தவர்களாக இந்த இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. தமிழ்ச் சாதி படிநிலைகளில் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த பெரும் சமூகங்கள் தற்போது அடுத்தது யார் என்கிற போட்டி முனைப்பிலிருந்து பின்வாங்கிக் கொண்டுள்ளனர். 'பார்த்தாலே தோஷமாக' கருதப்பட்ட நாடார்கள் இனம் தன் முனைப்பு காரணமாக இன்று தன்னை ஒரு வணிக சமூகமாக முன்னிறுத்தியிருக்கிறது. முக்குலத்தோர் மற்றும் வன்னியர் இனம் அரசு அதிகார அடுக்குகளில் தனக்கான நிலையான இடத்தைப் பெற்றிருக்கிறது. விவசாயப் பின்புலம் சார்ந்த நாயுடுகள் பெரும் தொழில் சமூகமாக தங்களை மாற்றிக் கொண்டுவிட்டனர் என்பதைக் கோயம்புத்தூர்ப் பக்கமாக ஒருதடவை போய்வந்தாலே தெரியும். தலித்துகளின் அரசியல் எழுச்சி அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக பெரும்பலத்தைத் தரவில்லையெனினும் சமூக அங்கீகாரத்தை நோக்கி அவர்களை நகர்த்துகிறது. அளவுகடந்த தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளித்திருக்கிறது. ஆனால் வாழ்ந்து கெட்ட இந்த இரண்டு சமூகம் தனக்கான தன்னம்பிக்கையை இழந்து உபரித் தொழில்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது தன்னுடைய பழம்பெருமைகளைப் பேசியபடி. புதிய தொழில் முயற்சிகள் மற்றும் அதனைச் சார்ந்து உருவாகும் பணபலம் ஒவ்வொரு சமூகத்தையும் படிப்படியாக அடுத்த கட்டத்தை நோக்குகிறது. இன்றளவும் எங்கள் ஊர்ப் பகுதியிலுள்ள உடமையுள்ள தலித்துகள் மற்ற தலித்துகளைவிட பலம் பொருந்தியவர்களாகவே இருக்கின்றனர். இந்தப் புதிய தொழில் யுகத்தில் ஒவ்வொரு சமூகமும் தனக்கான அடையாளங்களை நிறுவும் பொருட்டு தொடர்ந்து உழைத்து வருகின்றன. ஆனால் நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பிள்ளைமார்களும் என்ன செய்கிறார்கள்?
தமிழகத்தில் கடந்த இருபது வருடத்திய தொழில் முயற்சிகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். மேற்சொன்ன பழம்பெருமை பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் அதில் இருப்பார்கள்? ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை. ஏற்கனவே தொழில் சாம்ராஜ்யமான தங்களது முன்னோர்களைத்தான் இன்னமும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகும். தமிழகத்தின் சாதி குறித்த பழம்பெருமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதற்கான தேவை வந்திருக்கிறது. போட்டி சார்ந்த நவீனப் பொருளாதார வாழ்வில் தொழில் வளர்ச்சி சார்ந்த எத்தனிப்புகளில் தன்னம்பிக்கையை இழக்கும் சமூகங்கள், பழம் பெருமை பற்றி மட்டும் பேசும் சமூகங்கள் பின் தங்கிப் போகும் என்பதற்கு அந்த இரண்டு சமூகங்களே தற்போதைய உதாரணமாக இருக்கின்றன. தலைமைப் பொறுப்பேற்க இன்றைக்கு இந்தச் சமூகங்களைச் சார்ந்த இளைஞர்கள் தயாராயிருப்பதில்லை என்பதே நிதர்சனம். இந்த இரண்டு சமூகங்களில் இருந்து சமீப காலங்களில் உறுதியான அரசியல் தலைமையாவது உருவாகியிருக்கிறதா? எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மாறிவரும் சமூக எத்தனிப்புகளுக்கு இயைந்து கொடுக்காத எந்தச் சமூகமும் மிக விரைவில் பள்ளத்தை நோக்கிப் பாயும் என்பதற்கு உதாரணமாகத்தான் இவற்றின் வீழ்ச்சியைச் சொல்ல முடியும். இந்த உதாரணம் மற்றப் பழம்பெருமை பேசி வரும் சமூகங்களுக்கும் ஒரு படிப்பினை. 'சாதி மறுப்பு' 'சாதி ஒழிப்பு' என்கிற பொத்தாம்பொதுவான கருத்துகளைத் தூற எறிந்துவிட்டு தற்போதைய தமிழ்ச் சாதிகளின் நிலை பற்றிய தெளிவான விவாதம் ஒன்றைத் தொடர வேண்டிய தேவை இருக்கிறது. முன்னேறிய, முன்னேறும் சாதிகளைப் பற்றி வெளிப்படையான ஒரு ஆய்வு செய்யலாம். அதில் தெரிந்துவிடும் எல்லோருடைய வண்டவாளங்களும்...


எதிர்வினை
வலிய பாயும் இருள் -இன்பா சுப்ரமணியன்

---------------------------
(உயிரோசை இதழ்.9)
உயிரோசை சென்ற இதழுக்கு முந்தைய இதழில் உங்கள் கட்டுரை படித்தேன்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பற்றிய உங்கள் மதீப்பீடு மிகுந்த அதிர்ச்சி தருபவையாக உள்ளது.. நீங்கள் ஒரு நகரத்தார் வீட்டுக்குச் சென்ற பொழுது உங்களைப் பேசவிடவில்லை என்கிறீர்கள்.-ஒரு நகரத்தார் வீடு என்பது வெறும் வீடு மட்டுமில்லை... அதன் ஒவ்வொரு கல்லிலும் ஒரு விஷயம் உள்ளது..(.அதனால் தானே அதைத் தேடிசென்றீர்கள்?) முகப்பு முதல் பின் வாசல் வரை இன்றைய கட்டிடக்கலை நிபுணர்களுக்கு சவால் விடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.. நீங்கள் வீட்டைப் பார்க்கச் சென்ற பொழுது ஒரு பொறுப்பான மனிதராக அந்த வீட்டைப்பற்றி விளக்கி இருக்கிறார்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் --.. பொதுவாக ஒரு வீட்டில் உள்ள கலைப் பொருள்தான் பார்க்கவேண்டியதாக இருக்கும்... ஆனால் ஒரு செட்டிநாட்டு வீட்டில் சுவர் கூட கவனிக்க வேண்டிய விஷயம்தான்.. சுவர்கள் சாந்து, சிமிட்டி- இன்ன பிற பொருட்களோடு முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து கலவையாக மிகவும் வழுவழுப்பாகவும் வெண்மையாகவும் கட்டபட்டிருக்கும் . ஒவ்வொரு நிலையின் மீதும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு இன்று வரை நிறம் மங்காமல் இருக்கும்... இன்று மழை நீர் சேகரிப்பு பற்றி அனைவரும் பேசுகிறோம். ஆனால் அன்றே அதைச் செய்து இன்று வரை வெற்றிகரமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள் நகரத்தார்கள் . இதை வீடு பார்க்க வந்த உங்களிடம் விளக்கிக் கூறுவது பழைய பெருமை என்கிறீர்கள் ... அவர்கள் வீடு பற்றி விளக்க வில்லை என்றால் உங்களுக்கு அதன் பெருமை எப்படித் தெரியும்? .. இத்தனை கோடி தமிழர்கள் வாழும் இந்த உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இந்த செட்டியார் சமூகம் வாழ்ந்து கெட்டவர்கள் இல்லை.. வாழ்ந்து காட்டியவர்கள்..மன்னர்களுக்கே முடி சூடும் அதிகாரம் பெற்றவர்கள்- அடுத்த ஊருக்குச் செல்வது என்பதே சிரமமாக இருந்த காலத்தில் கடல் தாண்டிச் சென்று வாணிபம் செய்தார்கள் .. வாணிபத்தில் பெரும் பொருள் ஈட்டி அரச குடும்பத்தினரைப் போல வாழ்ந்தனர்..பல்வேறு இடங்களில் அன்ன சத்திரம் , தங்கும் நகர விடுதிகள்,கோவில்கள், மருத்துவ சாலைகள் ,கல்விக்கூடங்களை நிறுவி (ஒரு காலத்தில் அல்ல ) இன்று வரை அந்த சேவைகளைச் செய்து வருகிறார்கள். .. உங்களது இரன்டாவது நண்பர் அரண்மனை போல வீட்டை வைத்துக்கொண்டு தங்கையின் திருமணத்திற்காக சென்னைத் தெருக்களில் பணத்திற்காக அலைந்ததாகக் கூறியிருந்தீர்கள்.. இன்று நாம் இருக்கும் ஊரிலேயே நம் வீட்டு விசேஷங்களை நடத்திவிடுகிறோம்... ஆனால் செட்டியார் சமூகத்தில் அப்படி இல்லை. பெத்தாலும்,செத்தாலும் அது சொந்த ஊரில் ,சொந்த வீட்டில்தான்... பெண் கொடுபவர்களும், பெண் எடுப்பவர்களும் ஒருவரின் சொந்த வீடு ,அவர்கள் பாரம்பரியம் பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள்.. சொந்த ஊரில் அரண்மனை வீடு என்பது ஒரு செட்டியாரின் மதிப்பு, அடையாளம், கெளரவம், எல்லாமும் ... வீடற்றவரின் மதிப்பு பூஜியம் தான்... செட்டியார்கள் பலர் இன்று பண வர்த்தகம் மட்டும் செய்யாமல், பல்வேறு துறைகளில்,பல் வேறு நாடுகளில் முன்னணியில் உள்ளனர்... இன்று செட்டியார்கள் இல்லாத துறையே இல்லை எனலாம்.. அரசியலுக்காக , அரசு தரப்பு வேலைகளுக்காக உண்டான தகுதிகளை எல்லாம் இழந்து விட்டனர் இந்த சமூகத்து மனிதர்கள் என்கிறீர்கள். உலகிற்கே ஐந்தொகை சீட்டு , வங்கி, கணக்கு எனப் பல விஷயத்தையும் அறிமுகபடுத்தியவர்கள் .செட்டியார்கள்.. பல கோடி பேருக்கு வேலை உருவாக்கிக் கொடுத்தவர்கள் இந்த சமூகத்தினர்.. இன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பல செட்டியார்கள் உருவாக்கியவையே... ஒரு மூட்டை அரிசியில் சில கல் போல ஒரு சிலர் அப்படியிருக்கலாம்.. அவர்களைக் கொண்டு ஒட்டு மொத சமூகத்தையும் தகுதி அற்றவர்கள் போல சித்தரிப்பது ஒரு தவறான பதிவாகும்....இருவரின் தவறுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வீழ்ச்சியைச் சொல்ல முடியுமென்றால், செட்டியார்களில் பலர் மாறிவரும் சமூக எத்தனிப்புகளுக்கு இயைந்து எல்லா தொழில் துறைகளிலும் உச்சத்தில் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனதெப்படி? அரசின் எல்லா துறைகளிலும் உயர்மட்ட பதவிகளில் இருக்கும் இந்த இனத்தின் எத்தனை பேரை உங்களுக்குச் சுட்டிகாட்ட?அரசியல்...... (நீங்களும் வரி கட்டுகிறீர்கள்? ) ஊடகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்யுமுன், அவ்விஷயத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து எழுத வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பதிவும் வரலாற்று ஆவணமாகும்..-சாதி, மதம், சமுதாயம் என எழுதும் பொழுது மிகக் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போன்ற மனோபாவத்துடன் நீங்கள் எழுதியது அசோகர் மரம் நட்டார் என்பதற்கு பதிலாக அசோகர் மரம் வெட்டினார் என்பதைப் போல இருக்கிறது . எந்தவொரு சமூகத்தின் மீதும் இருட்டை வலுக்கட்டாயமாகப் பாய்ச்சாதீர்கள் .. பின் குறிப்பு--பவித்ரன், போன வாரம் உயிரோசையில் வந்துள்ள உங்கள் கட்டுரை பற்றி இந்த வாரம் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கிறீர்களா?..... ஏனெனில் அதுகூடப் பழமை பேசுவதுதான்..
இன்பா சுப்ரமணியன்
சென்னை