Sunday, June 21, 2009

வால்பாறை இலக்கியக் கூட்டம்-தமிழ்நதி

  1. கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என்று ஏறத்தாழ நாற்பதுபேரை உள்ளடக்கியபடி, வால்பாறையை நோக்கி அந்த மலைப்பாதையில் விரைந்துகொண்டிருந்தது பேருந்து. அபாயமும் அழகும் எப்போதும் சமாந்தரத்தில் பயணிப்பனபோல. கொண்டையூசி வளைவுகளில் திரும்பும்போதும், ஆழத்தில் அபாய அழைப்போடு கிடந்த பள்ளத்தாக்குகளை நம்மை மீறி எழும் கற்பனைகளுடன் பார்க்கும்போதும் உடல் சிறிது கூசியடங்கியது. எப்போதாவது தென்படும் மலையருவிகள், மிக நேர்த்தியான வரிசையிலமைந்த தேயிலைச்செடிகளால் பசுமைப்போர்வை போர்த்தப்பட்ட மலைகள், வெள்ளையும் மெலிதான சாம்பலும் கலந்து அள்ளிச் சாப்பிடத் தூண்டியபடி மலைகளில் செல்லங்கொட்டிக் கிடக்கும் மேகப்பஞ்சுகள்... பொள்ளாச்சியிலிருந்து இரண்டே மணிப் பயண தூரத்தில் இப்படியொரு அழகு கொட்டிக்கிடப்பதை நம்பமுடியாமல்தானிருந்தது. அ.மார்க்ஸ், மலர்விழி, அமுதா, கவின்மலர், நீலகண்டன், இசை, நரன், இளங்கோ கிருஷ்ணன், இளஞ்சேரல், மதிவண்ணன், ஜெயந்தி, சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம், லீனா மணிமேகலை, சல்மா பிரியதர்சன், விஷ்ணுபுரம் சரவணன், யாழன் ஆதி, கம்பீரன், அய்யப்ப மாதவன், மஞ்சு, வித்யாசாகர், சுகன்(பிரான்ஸ்), சஃபி, எஸ்.தேன்மொழி, எழில்செல்வன், முஜிபுர் ரகுமான், எச்.ஜி.ரசூல், ராஜன் குறை, இளங்கவி அருள், அசதா, க.மோகனரங்கன், சுரேஷ்வரன், சிறிதர், சாஹிப் ஹிரண், நடா.சிவகுமார், கரிகாலன், காந்தி (ஓவியர்), மணிவண்ணன் (ஓவியர்), தமிழ்நதி கலந்துகொண்டவர்களில் நினைவில் நின்ற பெயர்கள் இவ்வளவுதான். பயணங்கள் நெடுகிலும் ஏதாவது ஞாபகங்கள் கூடக் கூட ஓடிவரும். ‘மழையைத் தேடித் தொடரும் பயணம்’என்ற வாக்கியம் அன்று அடிக்கடி தோன்றி மறைந்தது. சென்னையிலிருந்து கிளம்பியபோது ‘தேனி சில்லென்றிருக்கும். சிலசமயம் மழைகூடப் பெய்யலாம்’என்றார்கள். பெய்யவில்லை. ‘பொள்ளாச்சி அற்புதமாக இருக்கும்’என்றார்கள். நான் தங்கிய விடுதி நகரமத்தியில் இருந்தது. நகரங்களில் அற்புதங்களைக் காண்பதற்கில்லை. வால்பாறையை நோக்கி கொழுத்தும் வெய்யிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது மழைக்காகவும் குறைந்தபட்சம் குளிருக்காகவும் உள்மனசு ஏங்கிக்கொண்டிருந்தது. நாற்பது கொண்டையூசி வளைவுகளில் இருபதுக்குமேல் கடந்தபிறகு குளிர் மெல்லென முகத்தைத் தடவியது. நெடுநாள் பிரிந்திருந்தவனின் கண்களை எதேச்சையாக எதிர்கொள்ள நேர்ந்த பரவசத்தைக் குளிர் தந்தது. நாங்கள் தங்குவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில், தோழிகள் சிலருடன் ஒரு அறைக்குள் இடம்பிடித்துக்கொண்டேன். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களான லீனா மணிமேகலை, சல்மா பிரியதர்சன், சுகிர்தராணி, இன்பா சுப்பிரமணியம் ஆகியோரால் அந்தக் கவிதை விமர்சன நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஜூன் 13ஆம் திகதி எழுத்தாளர் கமலாதாஸ் நினைவரங்கமாகவும், ஜூன் 14ஆம் திகதி கவிஞர் ராஜமார்த்தாண்டன் நினைவரங்கமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரவேற்புரை நிகழ்த்திய லீனா மணிமேகலை பேசும்போது, தொடர்ந்து நினைவரங்கமாகவே நடத்தவேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம், அப்பாஸ், சி.மணி, கமலாதாஸ், ராஜமார்த்தாண்டன் எனத் தொடர்வது வருந்தத்தக்கது என்றார். லீனாவைத் தொடர்ந்து அ.மார்க்ஸ் மற்றும் கரிகாலன் உரையாற்றினார்கள். எந்தவித ஈகோவும் இல்லாமல் கூடிப் பேசுவதற்கு இவ்வகையான கூட்டங்கள் உதவுவதாக கரிகாலன் சொன்னார். எழுத்து, கசடதபற, மீட்சி என அவ்வக்காலங்களில் கவிதைக்கு உறுதுணையாக இருந்த பல சஞ்சிகை மற்றும் எழுத்தியக்கங்களைக் குறித்து அ.மார்க்ஸ் பேசினார். புலப்பெயர்வு என்பது வெளிநாடுகளில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது என்று கூறிய அவர் அவற்றுக்கு உதாரணமாக, நக்சல்பாரிகளால் ஏற்படும் இடப்பெயர்வு, ஆதிவாசிகள் வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்படுவது, நகரை அழகுபடுத்துகிறோம் என்ற அரச முன்னெடுப்புகளால் பலவந்தமாக இடம்பெயர்க்கப்படுவோர் ஆகியவற்றை முன்வைத்துப் பேசினார். இந்த இயந்திரமயமான உலகில் நம்மைப் புதுக்கிக்கொள்ள உதவும் காரணங்களில் ஒன்றாக கவிதை தொழிற்படுகிறது என்றார். கமலாதாஸ் அரங்கினைத் தொடக்கிவைத்துப் பேசவேண்டிய கவிஞர் மாலதி மைத்ரி வரமுடியாமற் போனமையால், என்னை ஒரு கட்டுரை எழுதி வந்து வாசிக்கமுடியுமா என்று கேட்டிருந்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட ஒரேயொரு நாள் அவகாசத்தில் ஒருவழியாக அதை எழுதி ஒப்பேற்றி முடித்தேன். கட்டுரையில், கமலாதாஸ் இறந்தபிற்பாடு அவரைப் பற்றி ஜெயமோகன் எழுதிய வாசகங்களை மேற்கோள் காட்டியிருந்தேன். ஜெயமோகனின் திருவாய்மொழிதல் குறித்து பலருக்கும் பரவலான அதிருப்தியும் கசப்பும் இருந்ததைக் கூட்டத்தில் காணமுடிந்தது. “ஜெயமோகனது இணையத்தளங்களில் இடப்படும் கடிதங்களில் பல அவரே அவருக்கு எழுதிக்கொண்டவை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?”என்றொரு நண்பர் கேட்டார். இத்தகைய சித்துவிளையாட்டுக்களை, சுயசொறிதல்களை நான் அறியாதிருந்ததை அவரிடம் ஒத்துக்கொண்டேன். ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’கவிதைத் தொகுப்பைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் கட்டுரை வாசித்தார். பித்து, போதை, கவித்துவம் இம்மூன்றும் கலந்த கவிதைகளே ரமேஷ் பிரேதனுடையவை என்றார் அவர். தோற்கடிக்கப்பட்ட மனிதனின் வன்மம், துரோகத்தினால் நொய்மையடைந்த ஒரு மனம் ஆகியவற்றை அவற்றில் காணலாம் என்று மேலும் சொன்னார். ‘சாராயக்கடை’ எழுதப்பட்ட பின்னணி பற்றி இளங்கவி அருள் பேசுகையில், ரமேஷ் பிரேதன் தற்கொலைக்கு நெருக்கமான ஒரு மனோநிலையிலும் பித்து நிலையிலும் இருந்து அக்கவிதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டார். அடுத்து, இசையின் ‘உறுமீன்களற்ற நதி’கவிதைத் தொகுப்பை கரிகாலன் விமர்சித்துப் பேசினார். அவருடைய வார்த்தைகளில் சொன்னால் அது ‘விமர்சனமாக அல்லாது கொண்டாடுவதாகவே’அமைந்திருந்தது. ஒரு மகாகவிக்குரிய சாத்தியக்கூறுகளைத் தான் இசையின் கவிதைகளில் காண்பதாக கரிகாலன் சொன்னபோது, கைதட்டல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. (அப்போதிருந்து எங்களது நண்பர் வட்டத்தில் இசையை ‘மகாகவி’என்றே அழைக்கவாரம்பித்திருக்கிறோம்.) மிக எளிமையான சொற்களைக்கொண்டு கவிதை புனைவதோடல்லாமல், புதிய வடிவங்களையும் அவர் பரீட்சித்துப் பார்ப்பதாகவும், முன்னதன் சாயல் பின்னதில் இல்லாமலிருக்க முடிந்தளவு முயற்சிப்பதாகவும் கரிகாலன் மேலும் வியந்தார். ஆதர்ச உலகிற்கும் நடைமுறை உலகிற்கும் இடையிலான கவிஞனின் தத்தளிப்பை இசையின் கவிதைகளில் காணமுடிவதாகவும் கூறினார். அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’தொகுப்பைக் குறித்து அசதா கட்டுரை வாசித்தார். அந்தத் தொகுப்பை ஒரு இரயில் பயணத்தின்போது வாசித்ததாகவும், மனதில் பெரியதொரு பாதிப்பை நிகழ்த்தக்கூடிய தொகுப்பாக நிசி அகவலை இனங்கண்டதாகவும் அவர் சொன்னார். ஆழ்மனக் கிளர்ச்சியை உண்டுபண்ணத்தக்க அந்தக் கவிதைகளின் சிறப்பம்சமாக, தன்முனைப்பு அதாவது கவிஞனின் குறுக்கீடு இல்லாதிருந்ததைக் குறிப்பிட்டார். கவிதையே உச்சபட்ச சாத்தியங்களை நோக்கித் தன்னை நகர்த்திச் செல்லும் பாங்கினை அய்யப்ப மாதவனின் கவிதைகளில் கண்ணுற்றதாக அவர் பாராட்டினார். லீனா மணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைக்கான விமர்சனத்தை வழங்கவிருந்த க.பஞ்சாங்கம் அவர்கள் வரமுடியாமற் போன காரணத்தால், பஞ்சாங்கத்தின் கட்டுரையை சல்மா பிரியதர்சன் வாசித்தளித்தார். நவீன பெண் எழுத்தின் உச்சமாக லீனாவின் கவிதைகளை பஞ்சாங்கம் கொண்டாடியிருந்தார். நனவெளி மனதை நனவெளி வார்த்தைகளாலும் கவிதைப் பக்கங்களிலிருந்த குகை ஓவியங்களாலும் வெளிப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். பாலினம் கடந்த எழுத்து பற்றிய லீனாவின் கனவைச் சிலாகித்திருந்தார். ‘ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றமே இலக்கியம்’என்ற ஃபிராய்டின் வாக்கியத்தை ஓரிடத்தில் மேற்கோள் காட்டி, ஒடுக்குமுறையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாக இந்தக் கவிதைகளைப் பார்ப்பதாகவும் சொல்லியிருந்தார்.பஞ்சாங்கத்தின் விமர்சனத்தில் இடம்பெற்ற ‘காமக்களியாட்டம்’என்ற சொல்லின் விபரீத அர்த்தம் குறித்து முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்வியினையடுத்து, கூட்டம் கொஞ்ச நேரம் அதைப் பற்றிச் சலசலத்தது. “விமர்சனம் என்பது பாராட்டாக, புகழாரமாக இருத்தல் தகாது; ஆனால், இதுவரையில் வாசிக்கப்பட்ட நான்கு கட்டுரைகளிலும் அத்தன்மையினையே அவதானிக்க முடிந்தது”என்று முஜிபுர் ரகுமான் விமர்சித்தார். அவரையடுத்துப் பேசிய ராஜன் குறை, அக்கருத்துக்கு எதிர்வளமாகச் சொன்னார். அதாவது, “கோட்பாட்டு ரீதியான வாதங்களில் இருக்கக்கூடிய வரண்ட தன்மையை விடுத்து, சககவிஞரை உற்சாகப்படுத்தும் ஒரு கொண்டாட்டமாக நாம் ஏன் இதைப் பார்த்தலாகாது?” என்று கேள்வியெழுப்பினார். அ.மார்க்ஸ் குறைகளும் சுட்டிக்காட்டப்படுவதே சிறந்த விமர்சனமாக இருக்கமுடியும் என்றார். அடுத்து, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’யை விமர்சித்துப் பேசிய மதிவண்ணன் அதீத கோபத்துடன் கூட்டத்தைப் பார்த்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினார். ஊரானது சேரி என்றும் ஊர் என்றும் எவ்விதம் பிரித்துவைக்கப்பட்டிருக்கிறதோ அவ்விதமே இலக்கியமும் ஊர் இலக்கியம், சேரி இலக்கியம் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருப்பதாக மதிவண்ணன் சாடினார். ஏகாதிபத்தியங்களின் அடக்குமுறை அரசியலைப் பற்றித் தன் கவிதைகளில் பேசும் யவனிகா, ஏன் உள்ளுரில் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்தோ, மதத்தின் பெயரால் சமூகத்தில் நிகழ்த்தப்படும் அநீதிகள் குறித்தோ குரலெழுப்பவில்லை என்று கேட்டார். உடலையும் காமத்தையும் கொண்டாடுவது மட்டும்தான் பின்னவீனத்துவமா…? சமூக அடக்குமுறை, சாதி ஒடுக்குமுறை பற்றிக் கேள்வி கேட்காமல் புலன்களை மட்டும் கொண்டாடுவது எவ்விதம் தகும்? இத்தகைய காரணங்களால் அவரது கவிதையில் இருப்பதாக மற்றவர்களால் சொல்லப்படும் அரசியல்தன்மையைத் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். வேசிகள் போன்ற பதங்களைப் பிரயோகிப்பதன் வழியாக தான் ஒரு ஆண் என்பதை அடிக்கடி நிரூபணம் செய்கிறார் என்றும் சொன்னார். ஆத்மாநாம்தான் அரசியல் கவிதைகளின் 'அத்தாரிட்டி' என்று அ.மார்க்ஸ் சொல்வதை நான் மறுக்கிறேன் என்றார் மதிவண்ணன். அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவுமான விவாதங்கள் களைகட்டின. மதிவண்ணனுடைய அதீத கோபத்தின் பின்னாலிருக்கக்கூடிய துயரத்தைப் பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கரிகாலனை நோக்கி மதிவண்ணன் எழுப்பிய கேள்விக்கு அவர் பொறுமையோடும் பொறுப்போடும் பதிலளித்தமையால் பெரிய சச்சரவிலிருந்து அக்கூட்டம் தப்பித்து முன்னகரமுடிந்தது. ‘கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்’என்ற தொகுப்பைப் பற்றி க.மோகனரங்கன் கட்டுரை வாசித்தார். கிராமங்கள் நகரமயமாக்கப்படுதலின் வலியை கரிகாலன் சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதாக அவர் சொன்னார். அடையாளங்கள் மற்றும் அறச்சிக்கல்களைப் பேசும் கரிகாலனது கவிதைகள், கலாப்பிரியாவுக்கு அடுத்தபடியாக சித்திரத்தன்மையுடன் கூடியதாக அமைந்திருப்பதாக மோகனரங்கன் குறிப்பிட்டார். தன் எண்ணத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான இடைவெளிதான் ஒரு கவிஞன் எதிர்கொள்ளவேண்டிய மிகப்பெரிய சவால்… அதைக் கரிகாலன் சரியாக எதிர்கொண்டிருப்பதாகப் பாராட்டினார். எஸ்.தேன்மொழியின் ‘துறவி நண்டு’தொகுப்பினை விஷ்ணுபுரம் சரவணன் விமர்சித்துப் பேசினார். பெண்ணைக் குறித்தும் அவளது எண்ணங்கள் குறித்தும் ஆண்கள் எழுதிக்கொண்டிருந்த காலம் போய், பெண்ணே தன்னைப் பற்றி எழுத ஆரம்பித்ததானது ஆண்களைப் பதட்டம் கொள்ளவைத்ததாக சரவணன் சொன்னார். குறிப்பாக கவிதைகளில் பெண் கவிஞர்களின் ஆளுமையுடைய முன்னகர்வு ஆண்களை அச்சங்கொள்ள வைத்ததாகவும் குறிப்பிட்டார். தேன்மொழியின் கவிதைகள் உரையாடல்தன்மை பொருந்தியவையாகவும் ஒன்றுடன் மற்றொன்று சக்கரத்தன்மையுடைய தொடர்ச்சியைக் கொண்டிருப்பவையாகவும் தன்னால் அடையாளங்காண முடிந்தது என்றார். பெண்மையை எதிர்ப்பற்ற உருவமாக வைக்க தாய்மை பயன்படுகிறது என்ற இடத்தில் பெரியாரை மேற்கோள் காட்டிப் பேசினார். தாய்மை என்ற விடயத்தின் மேல் புனிதச்சாயம் பூசப்படுவதன் வழியாக பெண்களை மறைமுக அடிமைகளாக்கும் சதியினைச் சமுதாயம் செய்துகொண்டிருப்பதை தேன்மொழியின் கவிதைகளிலும் காண வாய்த்ததாக சரவணன் குறிப்பிட்டார். ஆண்மைய சிந்தனையிலிருந்து பெண்களால் முற்றிலும் விடுபட முடியாமலிருப்பதற்குரிய உதாரணங்களாக தேன்மொழியின் ‘இழிந்த இரத்தம்’, ‘கவிச்சி வாடை’போன்ற சொற்களைச் சுட்டிக்காட்டினார். ‘கடலுக்குச் சொந்தக்காரி’என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட மரகதமணியின் கவிதைகளைக் குறித்து எஸ்.தேன்மொழி கட்டுரை வாசித்தார். ‘கடல் குறித்த உயில்’ என்று வழக்கமான தனது பாணியில் குறிப்பிட்ட தேன்மொழி, கடலைச் சொந்தங் கொண்டாடுதல் என்பது வாழ்க்கையை நேசித்தல் என்றார். தொலைந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முன் நம்மை அடையாளப்படுத்தும் குரலாக மரகதமணியின் கவிதைகளைப் பார்ப்பதாகச் சொன்னார். பெண் மொழி உடலை அரசியலாக்கிப் பேசியது தேக்கநிலைக்குச் சென்றுவிட்டதாக தேன்மொழி ஆதங்கப்பட்டார். மரகதமணியின் தொகுப்பில் மொழிச்சிக்கல் தொகுப்பெங்கும் விரவிக்கிடப்பதைக் காணமுடிந்ததாகவும், சமூகக் கரிசனை கூர்தீட்டப்படவில்லை என்றும் விமர்சித்த தேன்மொழி இனிவருங்காலத்தில் அவை கவனத்திற்கெடுக்கப்பட்டு நிரப்பப்படல் வேண்டுமென்றார். இதனிடையில் மதிவண்ணனின் விமர்சனத்திற்கெதிரான விமர்சனமொன்றை சல்மா பிரியதர்சன் முன்வைத்தார். அதாவது, யவனிகா ஸ்ரீராமின் ‘திருடர்களின் சந்தை’தொகுப்பை ஒற்றைமையப் பார்வையோடு அதாவது தலித்தியப் பார்வையோடு மதிவண்ணன் அணுகியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு மதிவண்ணன் பதிலளிக்கையில், ‘சாதி ஒழிப்பைப் பேசாத ஒரு கவிதை அரசியல் கவிதையாக எப்படி இருக்க முடியும்…? சாதியொழிப்பைப் பேசாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து என்ன பயன்?’என்று கேள்வியெழுப்பினார். இலக்கியத்திலும் ஒரு சாதியச் சதி நடப்பதாக அவர் கொதித்துப்போய்ச் சொன்னார். அதையடுத்து வந்த விவாதங்களுடன் ‘கமலாதாஸ் அரங்கம்’நிறைவுபெற்றது. அன்றைய இரவைக் கொண்டாட்டத்திற்குக் கொடுத்தோம். ‘மகாகவி’இசையும் சரவணனும் நானும் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். ‘உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய கவிதைகளும். என்னுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன… உங்களுடையதும்’என்ற இசையின் பேச்சை வெகு சுவாரசியத்தோடு நானும் சரவணனும் கேட்டுக்கொண்டிருந்தோம். காலையில் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சொன்னார் “திரும்பத் திரும்பப் பேசினாலும் நான் உண்மையைத்தானே பேசினேன்”என்று. நாங்கள் உறங்கச் செல்லும்போது நள்ளிரவு இரண்டரை மணி.-------நாங்கள் தங்கியிருந்த அறையினுள் தட்டுமுட்டுச் சாமான்கள் போடும் குட்டி அறையொன்று இருந்தது. கட்டிலில் இடிபட்டு உருளவிரும்பாது அந்த அறைக்குள் ஒரு துணியை விரித்து கோழிபோல கொடுகிப்போய் நாலரை மணிநேரம் தூங்கி எழுந்திருந்து வந்தால், சிலரைத் தவிர எவரும் எழுந்திருக்கவில்லை. ஆற்றுக்கு குளிக்கப் போனவர்கள், சாப்பிடப் போனவர்கள், இன்னமும் எழுந்திருக்காதவர்கள் எல்லோரும் தயாராகிக் கிளம்பும்போது மதியமாகிவிட்டது. எப்போதும் மண்டபங்களுள் மூச்சுத் திணறி நடத்தப்படும் கூட்டங்களுக்கு மாற்றாக, நதிக்கரையோரத்தில் கவிதை வாசிக்கலாம் என்ற யோசனை உவப்பாகவே இருந்தது. நாங்கள் உயர உயரப் போனோம்…. போனோம்… தேயிலைச்செடிகளின் பசுமை கண்குளிர்த்தியது. ‘இங்கயும் கவிதை படிக்க (படுத்த) வந்துவிட்டார்களா?’என்பதுபோல குரங்குகள் பார்த்தன. பேருந்து வீதியில் நிறுத்தப்பட்டு நாங்கள் நதிக்கரையைத் தேடி நடந்தபோதுதான் அது எவ்வளவு ‘அபாயகரமான கவிதை வாசிப்பு’என்பது புலனாக ஆரம்பித்தது. ஏற்ற இறக்கமான நிலப்பரப்பில் மெலிந்த ஒற்றையடிப்பாதை, கீழே பெருகிச் சுழித்து நதி பாய்ந்துகொண்டிருக்க- உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்த- பலகைகள் உடைந்து ஆடும் தொங்குபாலம், பிடிமானமற்ற சறுக்குப் பாறைகள், காலை இழுத்துச் சரிக்கக் காத்திருக்கும் பாசிபடிந்த கற்கள்… இவைதாண்டி சிலுவைப்பாதை முடிந்த இடத்தில் அழகான காட்சியொன்று விரிந்தது. பாறைகளில் நீர் விழுந்து வெள்ளை நுரையோடு சலசலத்து விரைந்தோடும் ஒயிலில் மனங்கிறங்கியது. சூழநின்ற மரங்களும் காற்றில் கலந்திருந்த குளிரும் கனவில் எழும் ஓசைபோன்ற அந்தச் சத்தமும்… அந்த இடமே ஒரு கவிதையைப் போலத்தான் இருந்தது. எங்கள் கவிதைகளை வாசிப்பதனால் அச்சூழலின் தவங்கலைந்து போகுமென்றொரு எண்ணம் தோன்றி மறைந்தது. ஓடும் நீரில் காலளைந்து திளைத்தபோது காலகாலமாக அங்கேயே இருந்துவிடத் தோன்றியது. கனவின் பாதைகள் எப்போதும் கனவிலேயே முடிந்துவிடுகின்றன. 14ஆம் திகதி மதியம் 12:30 மணியளவில் வால்பாறை நதிக்கரையில் ‘ராஜமார்த்தாண்டன் அரங்கம்’களைகட்டியது. ஆரம்ப நிகழ்வாக மோகனரங்கன் கவிஞர் ராஜமார்த்தாண்டனைப் பற்றிப் பேசினார். ‘கொங்குதேர் வாழ்க்கை’தொகுப்பை ராஜமார்த்தாண்டன் கொணர்ந்தபோது எழுந்த சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். கவிதையோடு கவிதைக்காக நிறைய ஆண்டுகளைச் செலவிட்டவர் எனினும், அத்தகைய பெருமைகள் எதனையும் இளையவரிடத்தில் காட்டாமல் எல்லோருடனும் சர்வசாதாரணமாக நட்புப் பாராட்டக்கூடியவர் ராஜமார்த்தாண்டன் என்று சிலாகித்தார். ராஜமார்த்தாண்டனின் ‘புதுக்கவிதை வரலாறு’என்பது எழுதவரும் புதியவர்களுக்குக் கைகாட்டக்கூடிய சிறந்த படைப்பு எனக் குறிப்பிட்ட மோகனரங்கன், அவருடைய மரணம் தமிழிலக்கியத்திற்குப் பெரும் இழப்பு என்றார். அடுத்து, ஜி.எச்.ரசூல் சல்மா பிரியதர்சனின் ‘தெய்வத்தைப் புசித்தல்’கவிதைத் தொகுப்பு குறித்த விமர்சனக் கட்டுரையை வாசித்தார். கனவின் உடைபடலைக் குறியீடாக்கிக் கவிதைகளை எழுதியவர் சல்மா எனச்சொன்னார். குடும்பம் என்ற நிறுவனத்திற்கெதிரான உரத்த குரலை அவருடைய கவிதைகளில் கேட்கமுடியும் என்றார். பிரதி முழுவதிலும் அலையும் சாவு பற்றிய குறிப்புகள், குழந்தைகளின் உலகம், எல்லாவற்றையும் நேரடியான ஒன்றாக இல்லாமல் புனைவு கலந்த ஒன்றாகப் பேசும் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். பெருங்கதையாடல்களைத் தகர்க்கவேண்டியதன் அவசியம் பற்றிப் பெரிதும் பேசப்படும் சூழலில் சல்மா கண்ணன்-ராதா போன்ற பிரதிமைகளுள் மீண்டும் நுழைவது விமர்சனத்திற்குட்படுத்தப்படவேண்டியது என்றார். களைப்பு தூரத்து மழையெனக் கவிவதை உணரமுடிந்தது. தொடர்ந்து பல மனஅயர்ச்சிகளுக்கு ஆளானதால் நான் மட்டும் அதை உணர்ந்தேனா…? உண்மையிலேயே மழைத்துளிகள் விழ ஆரம்பித்திருந்தன. மழையைத் தேடித் தொடர்ந்திருந்த வேட்கை தீர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இளங்கோ கிருஷ்ணனின் ‘காயசண்டிகை’தொகுப்பிற்கான விமர்சனத்தை எழுதிவந்திருந்த இளஞ்சேரல் அவசர வேலைநிமித்தம் ஊர்திரும்பிப்போயிருந்த காரணத்தால், அந்தக் கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். தண்ணீரின் இரைச்சல் அவருடைய மெல்லிய குரலை மூழ்கடித்தது. அவர் வாசித்ததிலிருந்து ஒரு விடயம் மட்டுமே என்னால் கிரகிக்க முடிந்தது. இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் சமூகம் குறித்த அதிருப்தியையும், வாழ்வின் மீதான எள்ளல் கலந்த குற்றச்சாட்டையும் கொண்டிருந்தன. ‘காயசண்டிகை’எனது அடுத்த வாசிப்புப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. வாசித்துவிட்டுப் பகிர்ந்துகொள்கிறேன். அழகிய பெரியவனின் ‘உனக்கும் எனக்குமான சொல்’கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்தை யாழன் ஆதி வழங்கினார். மொழிசார்ந்த மௌனமும் அதிகாரத்தின் வெற்றியாகிறது என்றார். அதிகாரத்தினின்றும் அடையாளங்களை மீட்கும் பணியைச் செய்யவேண்டிய கடப்பாடு எழுதுகோல்களுக்கு உள்ளதென்றார். அழகிய பெரியவனின் கவிதைகள் அறிவுஜீவித்தனமான சொற்களின் கட்டுமானம் அல்ல, அவரது வாழ்வனுபவங்களிலிருந்து பெற்ற எளிமையான அறிவிலிருந்து பிறந்தவை அவை என்றார். ‘நீ’, ‘உன்’ போன்ற முன்னிலை விளித்தல்களால் அழகிய பெரியவனின் கவிதைகள் நவீன மொழியிலிருந்து சற்றே பின்தங்கியவைபோல தோற்றங்காட்டுவதாகக் குறிப்பிட்டார். கவிதைகளில் கதையைச் சொல்லிச் செல்லும் தன்மையானது, அதன் வடிவங் குறித்த கேள்விகளை எழுப்புவதாக இருப்பதாக யாழன் ஆதி கூறினார். வீடு திரும்பும் அவரவர் கவலைகள் மழையென மூடிக்கொண்டிருக்குமொரு தருணத்தில், ‘மீதி அமர்வை தங்குமிடத்திற்குத் திரும்பி அங்கே வைத்துக்கொள்ளலாமென்று’ ஆலோசனைக்கிணங்க நாங்கள் மீண்டும் அபாயகரமான பாதையைக் கடந்து அறைக்குத் திரும்பினோம்.நேரம் மாலை ஆறு மணியாகிவிட்டிருந்தது. இன்னொரு அமர்விற்கான பொறுமை தீர்ந்துபோயிருந்தது. பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் போல அவரவர் திசையில் சிலர் சிதறிப்போயிருந்தபடியால் திட்டமிட்டபடி நேரத்தைக் கையில் வைத்திருக்கமுடியாமல் போனது. யாரும் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவும் முடியாத சூழல். அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’தொகுப்புக்கான விமர்சனத்தை சல்மா பிரியதர்சன் வாசிப்பதாக இருந்தது. ஆனால், நேரமின்மை காரணமாக அந்த விமர்சனக் கட்டுரை வாசிக்கப்படவில்லை. அதே நிலைதான் இளம்பிறையின் ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’தொகுப்புக்கும் நேர்ந்தது. இளம்பிறையின் கவிதைகளை விமர்சிக்க வந்திருந்த கம்பீரனும் கட்டுரையை வாசிக்காமலே திரும்பவேண்டியதாயிற்று. தமிழ்நதியின் (என்னுடையதே) ‘சூரியன் தனித்தலையும் பகல்’தொகுப்பைப்பற்றி விமர்சனக் கட்டுரை வாசிப்பதாகச் சொல்லியிருந்த ‘புது எழுத்து’மனோன்மணி 14ஆம் திகதி காலையாவது வந்துசேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசிவரை அவர் வரவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவருடைய ஊரிலிருந்து வந்திருந்த சாஹிப் கிரண் ‘திடீர் உடல்நலக்குறைவால் மனோன்மணி பங்கேற்கவில்லை; ஆனால், கட்டுரையை ஏற்கெனவே எழுதிவைத்திருந்தார்’ என்ற தகவலைத் தெரிவித்தார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி நடத்தப்படவிருக்கும், ஈழத்தமிழ் கவிதைகள் தொடர்பான விமர்சனக்கூட்டத்தில் அந்தக் கட்டுரை வாசிக்கப்படவிருக்கிறது. அதில் கலந்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை.இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களிடம் கூட்டம் பற்றிக் கருத்துக் கேட்டபோது, பெரும்பாலானோர் நேரம் சரிவரக் கையாளப்படவில்லை என்ற கருத்தையே தெரிவித்தனர். மற்றபடி அதுவொரு இனிமையான ஒன்றுகூடல்தான். கவிதை தொடர்பாக எனது மண்டைக்குள் புதிதாக ஏதாவது ஏறியிருக்கிறதா என்று தட்டிப்பார்த்தேன்…ம்கூம்… நிறைய நண்பர்கள்தான் தேறியிருந்தார்கள். இருள் படர்ந்த கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்து வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தபோது, வெப்பத்தை நோக்கிய பயணம் என்ற எண்ணம் தோன்றி அச்சுறுத்தியது. வாழ்வில் எப்போதாவது பசுமைகளில் நாம் வந்து தங்கிச்செல்லலாம்; ஆனால், தரிக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் அது பொருந்தத்தான் செய்கிறது

  1. பிற்குறிப்பு: அந்த விமர்சனக் கூட்டத்தைப் பற்றி பலவாறான விமர்சனங்கள் நிலவுவதாக அறிகிறேன். அவரவர் வசதிக்கும் ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் புறணி மனோபாவத்திற்கும் ஏற்ப கொஞ்சம் ‘சரக்கு’சேர்த்துப் பெருப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்லமுடியும்.
    Labels: ,
    posted by தமிழ்நதி
    www.tamilnathy.blogspot.com

    Free counter

Saturday, June 20, 2009

நீ வந்து விட்டாய்


நீ வந்து விட்டாய்


யாவும் பாதியிலேயே

நிறுத்தப்பட்டு விட்டன .


விரும்பிச் சுவைத்துக்கொண்டிருந்த தேநீரொன்று

விருப்பமான தொலைபேசி உரையாடலொன்று

குழந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த முத்தமொன்று

விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று


நீ வந்து விட்டாய்.


யாவும் ஆறிவிட்டன .

யாவும் துண்டிக்கப்பட்டன .

யாவும் உலர்ந்து விட்டன .

யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன .


நீ வந்து விட்டாய் .

நான் செய்துகொள்ளவிருந்த

தற்கொலையும் பாதியிலேயே .

(uyirosai)

போகிறேன்




இந்த நாற்காலி ஏற்கனவே அமர்ந்திருக்கிறது


அதன் மடிமேலேறி அமர்கிறேன் .


சாவகாசமாய் தன்னைப் பரப்பிப் படுத்திருக்கும்


மெத்தையின் மேல் குப்புறக் கவுத்துகிறேன் என்னை .


ஓயாது நடந்து கொண்டேயிருக்கும்


சாலையின் மேலேறிப் போகிறேன் .


போகிறேன் ....போய்க்கொண்டேயிருக்கிறேன்


ஒரே சமயத்தில் நேராய் ,தலை கீழாய் ...


இன்னும் எப்படியெல்லாமோ தன்னை இருத்தியிருக்கும்


கல்லை சற்று நகர்த்திப் போட ...


போக ..போக


கல் பெரிய மலையாகிக் கொண்டிருந்தது .