Monday, July 27, 2009

பூமி தின்னி


பூமி தின்னி

அவன் பூமி தின்னி -
வாழ்விடங்களை விட்டு
பூர்வ குடிகளை
புலம் பெயர்ப்பவன்

அவன் நர மாமிசி-
குடிகளை தீயிலிட்டு
சிதைத்து
சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன்

அவன் ஸ்த்ரி வேட்டையன் -
வயது வேறுபாடின்றி பெண்களை
வன் புணர்வில்
யோனி சிதைத்தவன் -

தேசம் முழுவதையும்
இடுகாடாக்கி தன் சகாக்களோடு
மையத்தில் அமர்ந்து
பிணவாடை நுகர் கிளர்ச்சி அடைபவன்

கூரால் சூல் கொண்டவளை பிளந்து
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
அப்ப்பூமி தின்னியின்
உடலெங்கும் பரவி,
கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
சுடு குருதி குடித்த அந்நர மாமிசி .

Wednesday, July 22, 2009

உயிரோசை -ஜூன் இதழில் வெளியான கவிதை

வசந்த காலம்
உறவினர்கள் வந்து
தங்கிவிட்டுப்போன வீட்டை
கழுவிச் சுத்தப்படுத்துவது போல
குழந்தைகள் சிதறடித்த
விளையாட்டுப் பொருட்களை
அலமாரியில் அடுக்கி வைப்பது போல
வசந்த காலம்
முடிந்த நாளின் அதிகாலையில்
பூக்கள் மூடிக் கிடக்கும்
நகரத்தை
சுத்தம் செய்கிறார்கள்
துப்புரவுப் பணியாளர்கள் .

Thursday, July 16, 2009

மணல்வீடு இதழ் 1(மே - ஜூன்-2008) இல் வெளியான கவிதைகள்


வெள்ளை காகிதம்
---------------------------

மேசை மேலிருக்கும்

எதுவும் எழுதபடாத

வெள்ளை காகிதம் -அதில்

ஒரே சமயத்தில் எல்லா திசைகளிலும்

பறந்து செல்லும்

வெள்ளை கொக்குகளும்

பறவைகள் ஏதுமற்ற

வெற்று வானமும் .


காட்டுத்தீ
--------------
கொளுந்துவிட்டு எரியும்

காட்டுத் தீயினுள்ளே

ஊதாநிற சமுத்திரமொன்றும்

மஞ்சள்நிற நடுமதியமொன்றும்

பருமனான ஆரஞ்சு பழமொன்றும்

உற்றுப்பார் ....

உள்ளே தெரியும் .


வெவ்வேறு மரம்
------------------------

மழை காலத்திற்கு முந்தைய மரம்

மழை காலத்திற்கு பிந்தைய மரம்

கோடை காலத்திற்கு முந்தைய மரம்

கோடை காலத்திற்கு பிந்தைய மரம்

எல்லாம் வேறுவேறு

அதன் வேர்கள் மட்டுமே ஓன்று .


வசந்த காலம்
---------------------

ஆறு மாதத்திற்கு முன்

வசந்த காலத்தில்

நான் வேறொரு ஊரில்

வேறொரு வீட்டில் வசித்தேன்

மஞ்சளும் ,சிகப்புமாய்

பூக்கள் மூடிக் கிடக்கும்

சாலையின்

இறுதியில் முடியும்

வீடாய் இருந்தது அது .

இப்போது

கோடை காலத்தில்

நிறம் மங்கிய இலைகளும்

இலைகளே இல்லாத மரங்களும்

கொண்ட சாலையின்

இறுதியில் முடியும்

( இந்த முறையும் இறுதியாக தானிருந்தது)

வீடாயிருந்தது.

இந்த இந்தஇரண்டு வீடுகளும்

ஓன்று தான் என்கிறார்கள்

நான் நம்பவில்லை .

புது எழுத்து இதழ் 17 -( ஜூலை'2009 ) இல் வெளியான கவிதைகள்


பூவாத்தாவரம்

--------------------

வசந்தகாலம்

மண்டப சாலையில்

அதிகமாய் உதிர்ந்துக் கிடக்கும்

மஞ்சள் நிறப்பூக்களை

அள்ளிக் கொண்டுப் போய் கொட்டுகிறது

காற்று .

ஒரு பூவாத்தாவரத்தின் காலடியில்


சிற்றாறு

------------

பாலைவனத்தின் மணல் வெளியெங்கிலும்

ஓடுகிறது சிற்றாறு

தரையில் படாமல் ஓடுகிறது

அதன் நீர்
நிலவும் மிதக்காது

சூரிய ஒளியும் பாவாத

அச்சிற்றாறு

ஒட்டகங்களின்

கூனல் முதுகுகளில்.


கண்ணாடி றெக்கைகள்

-------------------------------

கிழிபட்டு

வேலியோரத்தில்

இறந்து கிடக்கும் தும்பியை

புரட்டிப்புரட்டிப் பார்க்கிறது

காற்று .

அதை எழுப்பும் விதமாய்

உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான 3 கவிதைகள்

பால் சுரக்கும் எனது மார்பு
-------------------------------------
வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன .
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன.
என் மார்பில் பால் சுரக்கிறது .
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன .
என் மார்பில் பால் சுரக்கிறது .

துயரம் ...
அவைகளின் வாய்க்குபொருந்தாத
மார்பெனக்கு.

கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்

நாய்க்குட்டி பொம்மை
--------------------------------
அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து
தன் திசையிலிருந்து மாற்றி மாற்றி
அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை .
உணவு மேசையை நோக்கி
உணவு மேசையின் மேலிருக்கும்
வெண்ணையில் தோய்த்துயெடுக்கப்பட்ட
ரொட்டி துண்டுகளை நோக்கி
மாற்றி மாற்றி அமர்ந்து கொள்கிறது
அந்த நாய்க்குட்டி பொம்மை

அந்த நாய்க்குட்டி பொம்மையுடன்
விளையாடிகொண்டே இருந்துவிட்டு
அப்படியே தூங்கி விட்டது குழந்தை .
காலையில் எழுந்து பார்த்தேன் .
குழந்தையின் முதுகிற்கு அடியில்
நசுங்கி கிடந்தது பொம்மை .
பாவம் இரவெல்லாம் எப்படி அழுததோ .

சிறகுகள்
-------------
மனதின் சரிவுகளில்
எண்ணிலடங்கா பறவைகள்
நியாபகங்களில் வளர்ந்து நிற்கிறது
பருத்த ஆலமரமொன்று
கண்களில் உப்பு நீர் சுனை .
மனதின் புற வெளியில்
எல்லையில்லா வானம்
எப்போதாவது தூரத்தில்
நீ தெரியும் வேளை
சரிவுகளிலிருந்து வெளிப்பட்டு
பறக்க துவங்குகின்றன .
ஆயிரமாயிரம் பறவைகள்
வானம் முழுக்க சிறகுகள் .