Sunday, April 15, 2012

எனது உறுப்பானது எனது எண்ணம்

தவறாய் வலப்புறம்
------------

ருத்ரமுர்த்தியின்


அர்த்தநாரி பிரதியை


கோடானுகோடி ஆண்டுக்கு முன்


பிழையாக வடிவித்து விட்டான்


தேவதச்சன் .


வலப்புறம் சிவனும்


இடப்புறம் உமையுமாய்


காலம் காலமாய்


வலப்புறம் கர்ப்பப்பையை


தாங்கிக்கொண்டிருக்கிறார்


ருத்ரமுர்த்தி

------

எனது உறுப்பானது எனது எண்ணம்.
----------

எனது உறுப்பாகவே மாறி இருந்தது
எனது எண்ணங்கள்
அதை அறுத்து விட எத்தனிக்கிறேன்
எனக்கும் என் எண்ணத்திற்கும்மிடையே சென்று
என் உறுப்பாகவே மாறிப்போன
என் எண்ணங்களை அறுத்தெறிய
தயக்கமில்லை இனி ஏதும்
ரத்தமின்றி அறுத்தெறிந்த
என் நினைவுருப்பு
மீண்டும்
மாமலையாய் வளருகிறது ..
---------------------------------

Thursday, February 23, 2012

கரைந்த பொழுதுகளில் .....

இரவுக்கும் இருட்டுகுமான
இடைவெளியில் நான்
என்னைக்காண எத்தனிக்கையில்
சந்திரன் தன் முகத்தை
பெருவெளியில் புதைத்துக்கொள்ள
என் உடல் கடத்தும் தெரிவின்றி
நான் வளர தெரியாமலே
கரைந்து போனேன்
பேர் இருளாய்
கரைந்த பொழுதுகளில்
ஒற்றை காலில் நின்றது
ஆங்கோர் கரும் கொக்கு
பின் வந்த கடும் பொழுதுகளில்
அதன் அடுத்த காலும் கரைந்து போக
ஒற்றை காலுமின்றி
ரெக்கை விரித்தது கரும் கொக்கு
பறக்க துவங்கிய அந்த பொழுதில்
பல கால்களாய் விரிந்தது
அதன் மென் சிறகுகள்

Sunday, February 12, 2012

தொல் மரபி

வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.

இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே

உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..

யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...

அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..

இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.

உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்

இவ்வுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்

இன்பா சுப்ரமணியன்

Friday, January 27, 2012

இசை நேரம்

காலையில் வரும் ஆதவன் பல முக மூடிகளை எனக்கு பரிசளிக்கிறார் தினமும்.. ஒவ்வொரு வேலைக்கும், இடத்திற்கும் தகுந்தார் போல முகமூடிகள்.. மாலை விடைபெறும் பகலவன், எனது முகமூடிகளையும் திரும்ப பெற்று சென்றுவிடுவார் ..
மாலை நேரம் என்னைக்கடத்த, முன் இரவில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சுட்டிகள் குரல் பிடித்து நான் என்னைக்கடத்த , இரவுக்கும் இருட்டுக்கும் இடையே உள்ள ஒரு இடத்தில என் காதுகளுக்குள் ஒலிக்க துவங்கும் பண்பலையின் பாடல்கள்... பகலில் பாட்டு கேட்க்க முடியா சூழல்.. இரவில் காதிற்குள் புகுந்துவிடும் ஒயர் போன் ஒலிக்க துவங்கும் பாடல்ல்கள்..
அனைத்தும் முத்து பாடல்களாய், என முத்து முத்தாய் பேசும் அன்பான அருணுடன் துவங்கும்.....
நான் நீங்க இளையராஜா என்பார் செந்தில் காந்தமாக ..
உங்ககிட்ட பேசிட்டிருப்பது உங்கள் காதல் டாக்டர் என்று சிரிப்பை பூசிய வார்த்தைகளை கொண்டு கொண்டாடுவார் சிவசங்கரி..
காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக்கும் எத்தனிப்புடன் மென்சிறகாய் வருடுவார் யாழ் சுதாகர்ர்ர் .... அடுத்து மனசுக்கு பக்கத்தில் அமர்ந்து தமிழை தேனில் குழைத்து பேசுவார் நம் ராஜசேகர் ....
பாடல்களின் இனிமை, சோகம், காதல், நட்ட்ப்பு, இயற்க்கை என விரியும் அந்த இரவு நேரம், அன்னத்தின் மென் சிறகுகள் கொண்டு வருடப்படும்.. வார்த்தைகள் மருதாணி பூசிக்கொள்ளும்..மேகங்கள் சாம்பிராணி சுமக்கும்..
உங்க போன எடுங்க சி எச் ன்னு டைப் பண்ணுங்க.. இடைவெளி விடுங்க ..உங்க பேர டைப் பண்ணுங்க... உங்க கருத்துக்கள எட்டு அஞ்சு எட்டு அஞ்சு நாலுக்கு குட்டி குட்டி வார்த்தைகளாய் டைப் பண்ணி அனுப்புங்க ன்னு ராஜசேகர் சொல்லும்போது அந்த எட்டும் அஞ்சும் கூட எவ்ளோ அழகுன்னு தோணும்..
உங்களுக்கான இரண்டு அழகான பாடல்களை கொடுத்து விட்டு நான் கேளம்புறேன்னு ராஜசேகர் கிளம்ம்பிய பின்னர் why this kolai veri kolai veri di? rytham change maame ... papaapaa என்று தமிழை பேசு தங்கலீஷில் தனுஷ் பாட, ப்பா .. தமிழ் எப்படி கலந்தாலும் அழகு குறையாத பன்னீர் சாரலாய் புதுப்பிக்கும்... இசைக்கு மொழி பேதமில்லை என்றாலும் ,நம் தமிழில் அதை கேட்கையில் ஒரு மமதை வருகிறது..

இந்த சந்தோஷமான அழகு நேரத்தில் எல்லாம் பிடிக்கிறது.. எல்லோரையும் பிடிக்க வைக்கிறது.. எல்லாமே ஆழ்ந்த காதலோடு தெரிகிறது..எங்கேயும் காதல்..எப்போதும் காதல்.. காதலாய் நான் ...

வலது புறமாய் படுத்து இயர் போனை வலது காதுகளுக்குள் வைத்ததால் வலது காதில் ஒலிக்கும் மது கலந்த போதை கொடுக்கும் தமிழின் இடது கரம் பற்றி நான் நடக்க எத்தனிக்கையில் எனது செவி மட்டும் உயிரோடு இருக்க ,எனது உடல் மறைந்து போக, இடது விழி கண்ணீர் வலது விழி புக, எனது பால்யம்,இடைக்காலம் ,இன்றைய நான் கரைந்து, எனது நினைவுகள் பர்வத மலையாய் வளர,என் தலை ஆகாயமாய் விரிந்து அண்டத்தில் நான் கரைய, எனது உயிர் வருடும் அந்த இசையுடன் இணைந்து என்னை கண்டுபிடித்து இசை போல உறங்கிய அந்த கணங்கள் உன்னதமாய் உயிர்வாழும் இன்பாவின் இசை நேரம்..... இனி என்றும் இசையோடு இசையாக இசை காதலாய் என் இனிய இன்பா :)

Thursday, January 19, 2012

எனக்குள் மீண்டும் நான் :
எனக்குள் மீண்டும் நான் :

சென்ற வருடம் ஜூன் மாதம் நடந்த ஒரு சின்ன விபத்தில் எனது வலது கை மணிக்கட்டு எலும்பு முறிவு என்று மருத்துவர் கூறியதில் ,என் வலது கை உபயோகம் வெகுவாக குறைந்ததில் எனது வலைத்தளம் என்னை போன்று தேங்கி விட்டது..

எப்போதும் எல்லா விடயங்களையும் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன்..பதிவு செய்யாத பலரை பதிவு செய்யச்சொல்லும் நான் பல விடயங்களை பதிவு செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாமல் போனது குறித்து நெருடல் இருந்தாலும், வருத்தமில்லை எனக்கு..

வலை தளங்களில் பதிவு செய்வது நம் கடமை..

ஒரு கை உடைந்ததாலே என் வலைத்தளம் தேங்கி விட்டது..
spider man கரம் உடைந்தால் எப்படி அவர் நியூ யார்க் நகர மக்களை காப்பாத்துவார்.???mashah allah..

கைகளால் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சுலபமாக செய்ய வழிவகுக்கும் விஞ்ஞானிகளுக்கு என் அன்பும் பாராட்டும்... எனை போன்ற எளியோர் உபயோகிக்கும் வகையில் ( அட , இப்படி டைப் அடிபதைதைத்தான் சொல்றேனுங்க.. மக்கள் எப்டி இவ்ளோ டைப் அடிச்சு தள்ராங்கோ?? ம்ம்மா ....)

சில சமயம் நிறைய பேசுவதும், பல சமயம் அதை சிலரிடம் பகிர்ந்து கொள்வதும் , ஒரு சிலரிடம் மட்டும் கலந்து பேசி சிரிப்பதும், ஒரு சிலரிடம் மட்டும் பேசி ஆதங்க படுவதும் ,ஒரு சில சமயம் நடக்கும் சில விடயங்கள் என் உணர்வுகளைச்சீண்டி விட ,அதற்காக என் கோவத்தை வெளிபடுத்துவதும், உற்ற நண்பர்களிடதே மட்டும் பல சமயம் பகிர்ந்து கொள்வது என்று இருப்பேன்.. பெரும்பாலான நேரம் மௌனமே எனக்குத்துணையாக இருக்கும்..

கோடை காலத்தில் உதிரும் வேப்பம்பூக்கள் போல நான் மிகவும் எளிமையானவள்.. நேசம் காட்டப்படும் இடங்களில் ஒரு வால் குழைத்த நாய் போன்று இருப்பேன்.. நேசம் ஒன்று மற்றுமே நிசமென்று நினைத்த நான் , அதில் உள்ள சாலக்கான வர்ணங்கள் கண்டு திகைத்து போனேன்..

கோவத்தின் நிறம்,காமத்தின் நிறம்,பாசத்தின் நிறம், போன்று பாசத்தின் போலி நிறம் கண்டு உணர்ந்து கொண்டேன்..

கொட்டுவது தேளின் சுபாவம்.. தேளை அடிப்பது வீரர்கள் வேலை.. ஓஓஓ ... எனக்கு கரப்பான் பூச்சி அடிக்கவே பயம்.. பிறகெங்கு நான் தேள் அடிப்பது?

நேரே நிற்கும் எதிரியை கையாள ஒரு திறமை இருத்தல் வேண்டும்.. மறைந்து நின்று தாக்கும் எதிரியை , அல்லது வஞ்சகமாக தாக்கும் நபர்களை அடையாளம் காண தனி திறமை வேண்டும்..

வாழ்வின் ஒவொரு நிமிடமும் கற்கும் நேரமே.. உண்மை.. நானும் அச்சரங்கள் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இனி எழுத்து கூட்டி படிக்கத்துவங்குவேன்..

ஒவொரு மனிதனும் ஒரு கட்டத்தில் வாசிக்கத்துவங்குவான்.. எனக்கு காலம், சட்டம், மருத்துவம், கோர்ட் ,கச்சேரி, போலீஸ் என பல நேரங்களில் பல விடயங்களை அதன் வர்ணகளோடு வாசிக்க கற்று கொடுத்துள்ளது.

நான் எனக்காக வாழ்ந்த நேரங்களை, எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கைக்காக என்று வாழ்ந்த நேரம் அதிகம்.. மனிதர்கள் முதல், கால்நடைகள் வரை அதில் அடக்கம்..

என்னோடு இருந்த அந்த ஐந்து அறிவு ஜீவன்கள் நாய் என்று அனைவரும் சொல்ல, என் அன்னையை காட்டிலும் ப்ரியம் காட்டிய சின்னு, புஜ்ஜி, சீனன் என்ற மூன்று ஜீவன்களின் நேசத்தில் , எத்தணை தரம் என்னை எவர் ஏமாற்றினாலும் , சின்னு, புஜ்ஜி, சீனன் காட்டிய அன்பின் வர்ணம் பூசி அண்டத்திற்கே அன்னையாய் வாழ எத்தனிக்கிறேன்..

எத்தணை மனிதர்கள், எத்தணை வர்ணங்கள் , எத்தணை விடயங்கள், எத்தணை அனுபவங்கள்...

ஒரு விடயம் கொடுத்த மகிழ்ச்சியில் சிரிப்பதற்குள் ஒரு அடி, ஒரு வலி, அதில் இருந்து மீண்டு எழுவதற்கு முன்னரே மேலும் ஒரு பூகம்பம், ஒரு சுனாமி,ஒரு அணு உலை உடைப்பு,உண்ணாவிரதம், யுத்தம், மரணம்,தூக்கு, விழாக்கள் ,பாராட்டு ,....உணர்வுகளின் வர்ணக்கலவை...

சில சமயம் எதை கடக்கிறேன் என்று புரியாமல் கடத்த படுகிறேன்.. இவை அனைத்தையும் புரிந்து கொண்டு நான் தெளிவாக ஒரு முடிவு எடுக்க , அல்லது, ஒரே வர்ணம் பூசி அலையை நினைப்பது என்பதை மிகக்கடினமாக உணர்கிறேன்..

எனது உறுப்பாகவே
மாறி இருந்தது எனது எண்ணங்கள்
அறுத்து எறிய எத்தனிக்கிறேன்
எனக்கும் என் நினைவுகளுக்கும் இடையேயான
எண்ண உறுப்புகளை அறுத்தெறிய
தயக்கமேதும் இல்லை இனி எனக்கு..

வாழ்க்கை மிகுந்த ஆழமாய் , வெறும் வார்த்தைகள் இட்டு நிரப்ப முடியா பள்ளமாய் தெரிகிறது.. இட்டு நிரப்ப வார்த்தைகளை தேடுவதை விட்டு , பள்ளத்தை நிரப்பும் எண்ணங்களை சேகரிக்கிறேன்..

கடினமான பிரயத்தனங்களை லகுவாக்கிவிடும் வித்தை நேசத்திற்கு மட்டுமே உண்டு .. இந்த வல்லமை உண்டு உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும்.

இப்படியான ஒரு எண்ணம் என்னிடத்தே தோன்றிய பொழுது எனக்குள் இருந்த நேசத்தின் வர்ணம் பூசிய மென்மையான என்னை எனக்குத்தெரிந்தது..

என் ஒரே நோக்கம் , அன்பு செய்வோம்..

மிகவும் குழப்பமாக பேசுகிறேன் என்று நினைப்பவர்களுக்கு என் நன்றி :)

நான் பைத்தியம் என்று உரைபவர்களை பற்றி கவலை பட நேரமில்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன்..

i just wish to cross the bridge as it comes...

என் முன் எனக்கு தென் பட்டு நான் கடப்பதை இனி பதிவு செய்வது என்பது என் இப்போதைய எண்ணம்.. அதன் வர்ணம் உணர்ந்து அதன் அடர்வு குறையாமல் என் வாழ்வின் மீது இறைவன் பூசியபடி இங்கு பதிவு செய்வேனாக...

ஆமென் !!!