Saturday, October 25, 2008

சாவு பறவைகள்


எங்கிருந்தோ
இந்த சாவு பறவைகள் வருகின்றன
எளிய மரணத்தை தேடி.
கூர் அம்புகளில்,
கவன் கற்களில் ......
குறிபார்க்கிறார்கள்
அதன் மரணத்தை.
உயர்அழுத்த மின் கம்பிகளின்
நேர்க்கோட்டில் சந்திக்கிறது
அதன் இருப்பும், இருப்பின்மையும் .
சாவு பறவைகள் வீழ்கின்றன மண்ணில் .
அதன் றெக்கைகள்
காற்றில் அசைகிறது லேசாய் .
அவை
நிகழ்ந்த தம் மரணத்தை
தாமே தெரிவிக்கின்றன
எல்லோருக்கும் முன்பாக பகிரங்கமாய் இறந்து .

இன்னும் அவை
கிளம்பி வந்துக்கொண்டே இருக்கின்றன
எளிய மரணத்தை தேடி
எல்லா திசைகளிலிருந்தும் .

Thursday, October 23, 2008

நிர்வாணம்


நிர்வாணத் துறவியின் பின்னால்

நிர்வாணத்தை உடுத்தி அலைந்தார்கள் கூட்டமாய்
இப்போது
ஆடைகளை எடுத்து உடுத்தினார் துறவி

நிர்வாணத்தை அவிழ்தெரிந்தார்கள் எல்லோரும்.

(உயிரோசை :இணைய இதழ் :5)

யாருமற்ற வீட்டில்

யாருமற்றுத் திறந்துகிடக்கும் வீட்டின்
மேசைமேல்
விரிந்து கிடக்கும்புத்தகத்தை
யாரோ
வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்
அதன் அடுத்தடுத்தபக்கத்தைத்
திருப்பியபடியிருக்கிறார்கள்
யாரேனும் உள்ளேறும்அவ்வேளை
வெளியேறிவிடுகிறார்கள்
அவ்வறையைவிட்டு
திரைச்சீலை மட்டும் அசைந்துகொண்டிருக்கிறது.

(காலச்சுவடு இதழ் :91)

படகுத்துறை

எதிர்கரையில் நின்று

சைகைசெய்து அழைக்கிறான்.

படகுக்காரனை

நீர்த் துறையிலிருக்கும்

அத்தனை படகுகளும்

அவனைப் பார்த்தவாறிருக்கின்றன.

ஆனால்

படகுக்காரர்கள்யாரும்

அவனைப் பார்த்ததாய்த்தெரியவில்லை.

எதிர்பார்த்தலின்

சிறிய படகொன்று

ததும்பி... ததும்பி அசைகிறது

அவனை நோக்கி.


(காலச்சுவடு :இதழ் .97 ல் வெளியானது )

மடாலயம்


மடாலயத்தின்கதவுகள்
திறந்துகிடக்கின்றன
உள்ளேஎல்லோரும
கண்களை மூடித்
தியானிக்கின்றனர்.
பிறகு
எல்லோரும்போய்விட்டனர்.
மடாலயம்
ஆழந்து தியானிக்கிறது
கதவென்னும்தன்
அகன்ற கண்களை மூடியபடி.

( காலச்சுவடு :இதழ் .97 ல் வெளியானது )

Wednesday, October 22, 2008

தேநீர்


நீ கலந்த
இந்தத் தேநீர்
இப்படி இருக்கக் கூடாது.
தேயிலையை
இன்னும் கொஞ்சம்
கொதிக்க விட வேண்டும் .
அதில் கொஞ்சம்
மணக்கும் ஏலம் கலந்து ...

சொன்னது போதும்.
நீயொரு
புதிய தேநீர் தயாரித்துக் கொடு
.

(உயிரோசை :இணைய இதழ் :7 )

சொல்


மலை என்றான்.
உயரமாக இருந்தது
அந்தச் சொல்
கிணறு என்றான்.
ஆழமாக இருந்தது
ஏதேனும் ஒன்றின் மேலிருந்து
குதிக்கப் போகிறேன் என்றான்.
அவனைக்
காப்பற்றும் சொல்லைத்தேடினேன் .
நினைவில் வரவேயில்லை
அமைதியாகிவிட்டது யாவும்
ப்ளப் .... ப்ளப் .... ளப்..
முட்டை முட்டையாய் வந்தது
கிணற்றுக்குள்ளிருந்து .
இப்போது நினைவில் வந்துவிட்டது
அவன் எங்கே?

(உயிரோசை :இணைய இதழ் :7 )

Tuesday, October 21, 2008

உடைந்த படகு


இற்றுப்போய்

ஏரியின் அடியில்

மூழ்கிக்கிடக்கிறது படகு.

மீன்கள் செல்கிறது

படகின் மேல்

படகு நீந்துகிறது

மீன்களின் கீழ் .

(உயிரோசை :இணைய இதழ் :7 )

அர்த்தநாரி


ருத்ரமுர்த்தியின்

அர்த்தநாரி பிரதியை

கோடானுகோடி ஆண்டுக்கு முன்

பிழையாக வடிவித்து விட்டான்

தேவதச்சன் .

வலப்புறம் சிவனும்

இடப்புறம் உமையுமாய்

காலம் காலமாய்

வலப்புறம் கர்ப்பப்பையை

தாங்கிக்கொண்டிருக்கிறார்

ருத்ரமுர்த்தி .


நன்றி :(உயிரோசை - இதழ் .7)

மரணம்



என் மரணத்தை

பலமுறை பார்த்து விட்டேன் நான்

ஒரு முறையேனும்

நீங்கள் பார்க்க வேண்டாமா?

இறுதியாய்

என் உடலை எடுத்து செல்லுங்கள்

4561 முறை

மரணம் பாவித்த அந்த உடலை.....