Sunday, February 12, 2012

தொல் மரபி

வானத்து பறவைகள்
பசியில் கத்துகின்றன
எனது மார்பில் பால் சுரக்கிறது .
கடல் நீர் மீன்கள்
பசியில் வாய் பிளகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது
கானக விலங்குகள்
பசியில் அலறுகின்றன
என் மார்பில் பால் சுரக்கிறது .
துயரம் ...
அவைகளின் வாய்க்கு
பொருந்தாத மார்பெனக்கு.
கவலையில்லை
மூன்றாய் அறுத்தெரிந்து
வானத்திற்கும் ,
கடலுக்கும் ,
கானகதிற்க்கும்...
இனி பசியில்லை
எங்கும் ,எதற்கும்
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்
நான், என் அம்மா
என் அம்மா அவளின் அம்மா
அவளின் அம்மா அவளின் அம்மா
......ளின் அம் ....மா....அவ ......
பதினேழாயிரமாண்டு
பாரம்பரியம் இருக்கிறதெனக்கு.
என் கருவறையிலிருந்தே
பிரசவிக்கிறேன் என்னை
என் முலையிலிருந்தே
ஊட்டுகிறேன் எனக்கு.

இப்போது மரணப்படுக்கயிளிருப்பவலும்,
பூமிப்பந்தை போன்ற
வயிற்றோடு
பிரசவிக்க இருப்பவளும்
நானே..
நச்சுக்கொடியை உந்தித்தள்ளி
வெளி வரும்
பெண் சிசுவும்
நானே

உலகமெங்கும்
ஒரு கருப்புநிற பெண்ணாக
அவமானப்படுதபடுபவளும்
நானே..

யுத்த தேசங்களில்
சிதைககபடுபவளும்
நானே ...

அதிகார மையத்தின்
தோட்டாக்களால்
சல்லடயாக்கபடுகிறேன்..

இவர்களையெல்லாம்
கடவுள் தொற்றுநோய் கிருமியை
இப்பேரண்டத்தின் மீது
ஏவிகொல்வதைப்போல
என்னிலிருந்து நான்
பிரசவிதுக்கொண்டே இருக்கிறேன்
எண்ணற்ற
புரட்சிக்காரிகளையும்
புரட்சிகாரர்களையும்.

உலகமுழுவதும் வியாபித்திருக்கும்
அதிகார வர்க்கமே
இதோ எனது உயிர்
இதோ எனது உடல்
இதை உணவாக உட்கொள்ளுங்கள்
இத்திறு விருந்திற்கு அழைக்கப்பெற்ற
நீங்கள்
பேறு பெற்றவர்கள்

இவ்வுயிரை
இவ்வுடலை
உங்களால் தின்று செரிக்க இயலாது
ஏனெனில்
இது பதினேழாயிரமாண்டு
முது உடல்
வலுவேறிய தசை
உப்பேரிய குருதி
ஏனெனில்
நான்
தொல் மரபி,
முதல் சூல் ,
ஆதித்தாய்

இன்பா சுப்ரமணியன்