Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்புவண்ண`டி.சர்ட் அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலை கல்லுரி மாணவர்கள், ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான, போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கிய கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவினர் அடிக்க, ஊர்வலம் புறப்பட்டது.
ஜந்தர்மந்தர் வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடைபயணம் நடந்தது. பேருந்துகள், மகிழுந்துகள் , தானிகளில் சென்ற பயணிகள் கைப்பதாகைகளைப் படித்துக் கொண்டே சென்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. 'போரை நிறுத்து; போரை நிறுத்து ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்து, இந்திய அரசே போரை நிறுத்து, காந்தி தேசம் கொல்வதா, புத்த தேசம் அழிப்பதா, எங்கள் ரத்தம் ஈழத்தமிழர் ரத்தம், விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடங்கும் போர்' என்பது போல பல முழக்கங்கள் டில்லி குளிர்க்காற்றில் கலந்து தேசிய இனங்களின் காதுகளை அறைந்தது.
முன்னால் பறையிசையும் அதற்கு அடுத்து படைப்பாளிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மீனவ நண்பர்களும் அதனைத்தொடர்ந்து மாணவர்களும் பேரணியில் அணிவகுத்தனர். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்களும், கலைஞர்களும் இந்த பேரணியில் முக்கிய பங்காற்றினர்.
பாராளுமன்றத்தை நெருங்க நெருங்க ஊர்வலத்தில் வந்தவர்களின் உள்ளங்களில் உத்வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பாராளுமன்ற வீதியை நெருங்க காவலர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்க ஈழ மக்கள் தோழமைக்குரல் நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சிறிது முன்னேறி மீண்டும் வேறு ஒரு இடத்தில் காவலர்கள் தடுக்க அங்கேயும் சாலையிலேயே அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். டில்லி மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் சூழ ஈழத் தமிழ தோழமைக் குரலின் செய்திகளும், கோரிக்கைகளும் நாடெங்கும் சென்று சேர்ந்தது.
பிறகு புத்தர் கலைக்குழுவின் குரலிசைக்கலைஞர் மகிழினி அவர்கள் ஈழம் சார்ந்த துயரங்களை ஒப்பாரிப்பாடலாகப் பாடினார். பறையிசையும் பாடல்களும் பாராளுமன்ற தெருவை வெம்மையாக்கின. சமர்ப்பா குமரன் அவர்கள் பாடிய பாடல்கள் எழுச்சிக்கொள்ள வைத்தன. இதற்கிடையில் ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தர்ணாவிற்கான ஏற்பாட்டினையும் ஒலி பெருக்கியும் ஏற்பாடு செய்தனர். 33% இட ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தி முடித்த பெண்கள் இயக்கத் தோழர்கள் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் தோழர்.ஆனி ராஜா அவர்களின் தலைமையில் ஈழத்தமிழர் மீது நடத்தபடும் போரை நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றனர். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுடத் துயர் என்றும், அந்த துயரைத் துடைக்க தம்மால் ஆனவற்றையெல்லாம் செய்வோம் என ஆதரவு குரல் எழுந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் உரைவீச்சு உணர்வுகளை ஒன்றிணைத்தது. டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் முழக்கங்களை இந்தியில் எழுப்ப, பெருங்கூட்டம் திறண்டது.
போராட்டத்தின் இறுதிக்கட்டம் உணர்ச்சிமிக்கதாக அமைந்தது. சமர்ப்பா குமரன் பாடிய 'செவல மாடு கட்டியிருக்கும் சலங்க ஒடியட்டும்; சிங்களவ கொட்டமடிக்கும் இலங்க ஒடியட்டும்' பாடலுக்கு எல்லாரும் இணைந்து ஆட ஆரம்பிக்க வேகம் கூடிக்கொள்கிறது. பல்வேறு இடங்கள்லிருந்த மக்கள் எல்லாரும் அங்கே வந்து ஒருமித்தனர். இந்த நேரத்தில் டில்லி மாணவர் அமைப்பை சார்ந்த ஆதிகேசவன் அவர்கள் இந்தியில் பேசிய இறுதி உரை அனைவரையும் கவர்ந்தது. இலங்கை அரசின் கொடூரம்; இந்திய அரசின் துரோகம், தமிழக அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை தேர்தல் சந்தையில் விற்கும் நிலைப்பாடு ஆகியவற்றைக்குறித்து சூடான விவாதங்களோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது
இந்திய இறையான்மைக்கு விழுந்த பலத்த அடி
ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் சார்பில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஈழத்தமிழர் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தக் கோரியும் தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளும் போராட்டம் தொடர்ந்தது.ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலில் போரை நிறுத்த வலியுறுத்தும் முழக்கங்களுடன் எழுத்தாளர்கள்,மாணவர்கள்,மீனவ அமைப்பினர், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். சமர்ப்பா குமரன் புத்தர் கலைக்குழுவோடு இணைந்து எழுச்சிப்பாடல்களைப் பாட பறையிசையும் ஆட்டமும் பந்தலின்முன்பு ஜந்தர் மந்தரில் வெவ்வேறு சமூகப் பிரச்சினைக்ளுக்காக கூடியிருந்த மற்ற மாநிலப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது.
உறவுகளை இழந்தவர்கள் தலைமுடி நீக்குவது என்பது தமிழர்களின் மரபுவழிப் பண்பாடு. ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மொட்டைப் போடும் போராட்டத்தை நடத்தினார்கள் மாணவர்கள்.பறையும் வாழ்த்தொலியும் வேகமாக எழும்ப சாமுவேல்,ரமேஷ்,டில்லிராஜ்,வினோத்குமார்,மற்றும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் ஆகியோர் மொட்டை அடித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இது சுற்றியிருந்த அனைவரையும் வேறொரு தளத்தில் பிரச்சனையின் தீவிரத்தை உணர வைத்தது. அருகே வைகோ உண்ணாவிரதம் இருந்ததால் மதிமுக தொண்டர்கள் வந்து ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.திடீரென ராஜபக்சேவின் படத்தை அனைவரும் செருப்பால் அடித்தனர்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட தமிழக மற்றும் பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு வந்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், பா.ம.க. உறுப்பினர்கள் கு.ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, மோகன், கு.ராமதாஸ் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர். அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார். போராட்டத்திலிருந்த மாணவர்கள் இந்தியா போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிலகவேண்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். ஈழத்தில் மிகவும் கொடுமையான முறையில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 'ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்திய அரசு ஒருவகையில் காரணமாகவே இருக்கின்றது.
போரை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருந்தாலும் அதுவே போரை நடத்திக்கொண்டிருப்பதுதான் மிகவும் கொடுமை. இந்திய அரசு போரை நிறுத்தவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரக்க குரல் எழுப்புவேன்' என்று உரையாற்றினார். யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் உரையும், கலந்துரையாடலும், ஈழத்தின் அவலத்தை உக்கிரமாக பதிவு செய்து, ஈழ மக்களின் விடுதலைப் போராட்டதை அங்கீகரிக்கும் அவசியத்தை அனைத்து தளங்களிலும் அழுந்த எடுத்துச் செல்லும் உத்வேகத்தை தந்தது.
இச்சூழலில் போராட்டவாதிகளில் ஒரு பிரிவினர் எழுத்தாளர்களில் கவிஞர் லீனா மணிமேகலை, கவிஞர் மாலதி மைத்ரி, கவிஞர் மற்றும் ஊடகவியலாளர் இன்பா சுப்ரமணியன் ,எழுத்தாளர் கோணங்கி, கவிஞர். யவனிகா ஸ்ரீராம், அஜயன் பாலா உள்ளிட்ட குழுவினரும் மாணவர்கள் வெங்கடாசலம்,பிரபாகரன், தர்மேந்திரன் ஆகியோர் கொணட குழுவும் மற்றும் மனித உரிமையாளர்கள் தனம், மஹேஷ், மீனவ இயக்கத் தோழர்கள் லிங்கன், பாரதி என 28 பேர் இலங்கை தூதரகம் முன் சென்று முற்றுகைப் போராட்டமும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்த புறப்பட்டனர். தூதரகம் முன் சென்றதும் தாங்கள் கொண்டுவந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களக் காட்சியினை அடைந்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சூழ்ந்துக் கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
காவல்துறை அவர்களை கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது.கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான் நாங்களல்ல என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைகுப்பின் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.
இது இலங்கை தூதரகம் முன் நடந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரதமும் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் அனைவரும் உரத்து முழக்கம் எழுப்பினர். ஒவ்வொருவரும் உணர்ச்சிப்பிழம்பாகி இருந்தனர். போராட்டத்தை வாழ்த்த பத்திரிகையாளரும் இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதுவராக பணியாற்றியவரும் தொடர்ந்து மனித உரிமைக்காக எழுதிவருபவருமான குல்தீப் நய்யார் வந்திருந்து பேசினார். சச்சார் அறிக்கையைத் தந்த ராஜேந்திர சச்சார் அவர்கள் போராட்டத்திற்கு வந்திருந்து கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேசினார். கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யப்படும் வரை அவ்விடத்தைவிட்டு வரமாட்டோம் என்றும் வேண்டுமானால் எங்களையும் கைது செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் முழங்கினார்கள்.
அதே நாளில் தன் டில்லி உண்ணாவிரதப் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ அவர்கள், ஈழத் தமிழர் தோழமைக்குரலின் இலங்கை தூதரக முற்றுகை இந்திய இறையான்மைக்கு விழுந்த முதல் அடி என்று குறிப்பிட்டு பேசினார். ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாசின் தீ தோழர்களின் மனதையும் பற்றி கொந்தளித்ததில் அன்று இரவு சிவந்து இருண்டது.
அறம் நின்று கொல்லும்
மூன்றாவது நாளும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில், ரிசர்வ் போலீசும் கலந்துக் கொணடது என்று தான் சொல்ல வேண்டும். வலுவான பாதுகாப்பு வளையம். அமைதியான வகையில் நாள் முழுதும் டில்லி தோழர்களும், கலைஞர்களும், மாணவர்களும் வருகை தந்த வண்ணம் இருக்க, போராட்டம் வலுப் பெற்றது. போராட்டங்களில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு தோழர்களும் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளையும், போராடும் சக்திகளை ஒன்று சேர்க்கும் அவசியத்தையும் பகிர்ந்துக்கொண்டனர். தொடர்ந்து பத்திரிக்கையாள்ர்கள் சந்திப்புகளும் கலந்துரையாடல் போலவே நடைபெற்றது ஊடகங்களின் ஈழம் குறித்த ஊடகங்களின் தவறான புரிதல்களை, முன்முடிவுகளை களைய உதவியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாலை நடைபெற்ற பேரணியும், கலை நிகழச்சிகளும், கலந்துரையாடலும், பேரெழுச்சியாய் நடைபெற்றது.இந்திய ஏகாதிபத்தியத்தின் நாடி பிடித்து உலுக்கும் வேளை வந்துவிட்டது என்பதே கூடியிருந்த அத்தனை பேரின் உணர்வொருமையாக இருந்தது. ஈழம் குறித்த தேசிய இனங்களின் கொலைகார மெளனத்தை கலைக்கும் பணியை இனி மாணவர்களும், அறிவு சமுதாயமும் மூர்க்கமாக செய்யத் தொடங்கவில்லையென்றால், இனப்படுகொலைக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பாகி விடுவோம் என்ற உண்மையை உடைத்து தொடங்கிய விவாதங்களின் ஆவேசம் அறத்தின் மடையைத் திறந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் முத்துக்குமாருக்கும், உயிர் நீத்த மற்ற நண்பர்களுக்கும் தமிழிலேயே வீரவணக்கம் செய்து முழங்கியது, ஈழ விடுதலையின் குரலை மானுடத்தின் மனசாட்சியாக ஒலித்துக் காட்டியது
No comments:
Post a Comment