Tuesday, May 11, 2010

அந்திமழை

மரங்களிலிருந்து
செடியிலிருந்து
கொடியிலிருந்து
மலர்ந்துகொண்டே
இருக்கின்றான் மலர்கள்

பிறந்து கொண்டே
இருக்கும் உலகம்
வெவ்வேறு கருவறையிலிருந்து

***** ***** ***** *****

உன் பிரார்த்தனைக்கான
மலர்களை தினமும்
என் தோட்டத்திலிருந்து
கொய்கிறாய்

உன் பிரார்த்தனைக்கான
வார்த்தைகளைக்கூட
என்னிடமிருந்தே
இரவல் வாங்குகிறாய்

உன் பிரார்த்தனை
முழுவதுமாய்
என்னையே முணுமுணுக்கிறாய்

பின்னொரு நாள்
என் தோட்டத்திலிருந்த
இறுதி மலரையும்
பறித்து போனாய்.

***** ***** ***** *****

உன்னைவிட்டு நான்
அல்லது
என்னை விட்டு நீ
விலகிப் போகும்
நாளொன்றில்
தத்தம் நினைவுகளோடு
பயணிக்கிறோம்

போகும் பாதையின்
ஓரங்களில்
கடந்து போய்கொண்டிருக்கிறது
கருவேல மரங்கள்

***** ***** ***** *****

பற்றி எரியும்
மூங்கில் காடு
சுழன்றடிக்கும்
பெருங்காற்றில்
வாசித்துக் கொண்டிருக்கிறது
தனக்கான துயரகீதத்தை
கருகி கிடக்கும்
புல்லாங்குழளினூடாக

***** ***** ***** *****

புதைவதுதான்
வாழ்வென்பது
தெரியாதெனக்கு
தியானத்தில்
புத்தகத்தில்
காதலில்
உறவுகளில்
புதைவதுதான்
மரணமென்பதும்
தெரியாதெனக்கு

***** ***** ***** *****

பாதங்களை
தொடர்ந்தபடி இருக்கின்றன
கரைகள்
தடயமற்றுச் செல்ல
நீருக்குள் இறங்கி நடக்கிறாய்
போ..
கரையேறிச் செல்கையில்
என் உருவம் கண்டு
திகைப்பின் ஆழத்திற்குள்...

***** ***** ***** *****

என்னிலிருந்து மீண்டு
உயரே பறக்கிறாய்
ஒரு பறவையென
வெகு தொலைவிற்கு
உதிர்ந்து விழும்
உன் சிறு நினைவுகளை எடுத்து
ஒளித்து வைக்கிறேன்
அனுமதிக்கப்பட்டு விட்டோம்
வெவ்வேறு காலங்களுக்கு...

***** ***** ***** *****

நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில் இறங்கி
நடக்கத் துவங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்

No comments: