Wednesday, May 26, 2010

வால்பாறையில் ஆங்கிலேயர்கள் கட்டிய பாலமும், நானும்..
வால்பாறையில் ஆங்கிலேயர்கள் கட்டிய பாலமும், நானும்..

எண்ணத்தின் வேர்களில் பல விடயங்கள் தங்கிவிடுவதுண்டு..பலமுறை எனது கருத்துக்களை பதிவு செய்ய எண்ணி ,சக நண்பர்களின் பதிவு போதுமென்று இருந்துவிடுகிறேன் நான் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களில்.

இன்று காலை நண்பர் ராசா தொடர்பு கொண்டார்.. பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பின்னர்," மேடம், வால்பாறைக்கு சுற்றுலா சென்று வந்தேன்" என்றார்.. அந்த மலை வாசமும்,கூந்தல் கோதிய வெண்பஞ்சு மேகங்களும், மரணபயம் காட்டிய மரப்பாலமும் காட்சிகளாய் கண்களில் விரிய," மரப்பாலம் தாண்டி கல்லார் அருவிக்கு போனீர்களா? என்று கேட்டேன். " இல்லை மேடம், ரெண்டு பேறு அந்த பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்துட்டாங்களாம். அதுனால அந்த பாலத்த மூடிட்டாங்க, பார்க்க முடியலங்க " என்றார்.அதிர்ந்து போனேன்..வால்பாறை பாலம் பற்றி நிச்சயம் எழுத முடிவு செய்தேன்.

படைப்பாளிகள்,விமர்சகர்கள் என ஒரு நண்பர்கள் குழு சென்ற வருடம் வால்பாறையில் கூடினோம்.அது குறித்து பல கருத்துக்கள் ,விமர்சனங்கள் எழுந்தது. அது பற்றி பல செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. என்றாலும் .தோழி தமிழ்நதி நிகழ்வு குறித்து மிக விபரமாக அவரது வலைப்பூவில் பதிவு செய்திருந்தார்.. அதை எனது வலைப்பூவில் இணைத்திருந்தேன். அத்துடன் வால்பாறை நிகழ்வு பற்றி மறந்து போனாலும் ,அங்கு அருவி அருகே செல்ல நடந்த பிரயத்தனங்கள் அந்த பாலம் பற்றிய விடயங்களை பலருடன் பகிர்ந்துகொண்டேன்..

எங்கள் வால்பாறை சந்திப்பில், நதியோரம், அருவியோரம் என விமர்சனகூட்டதை நடத்த எண்ணியதை தொடர்ந்து எங்களோடு வந்த சக படைப்பாளியின் நண்பர் சின்னக்கல்லார் அருவிக்கு போகலாம் என்றார் .அதை தொடர்ந்து அனைவரும் குதுகூலத்துடன் அருவி நோக்கி கிளம்பினோம்.

குற்றாலம் போல வண்டி நிறுத்திய இடத்தின் அருகே அருவி இருக்குமென்ற மிக பெரிய நம்பிக்கையுடன், (??) அவர்களோடு நானும் இணைந்துகொண்டேன். வாகனத்தில் இருந்து இறங்கியவுடன், நடக்கதொடன்கினோம் . சில் வண்டின் ரீங்காரமும், அருவியின் உல்லாச கூக்குரலும் என்னை குழந்தையாக மாற்றிவிட்டது..சற்று நேரத்தில் ஒத்தையடி பாதையும் அடர்ந்த வணமுமாக ,நீண்டு கொண்டே போனது . ஒருமணிநேரமும் நடந்து சென்ற பினரும் முடியாத பாதை கண்டு சோர்ந்துபோனேன்.. சற்று முன்னர்வரை உல்லாச கூக்குரலாக கேட்ட அருவியின் சத்தமும் ,வணத்தின் கணத்த அமைதியும் பயத்தை கொடுத்தது. ஊனமுற்ற வலது கால் என்னோடு ஒத்துழைக்க மறுத்தது.

' நான் வண்டிக்கு திரும்பி போய் விடுகிறேன், நீங்கள் செல்லுங்கள் என்று என்னுடன் வந்தவர்களிடம் கூறினேன். பாம்பு பூச்சி, சிறுத்தை எல்லாம் வருமாம். நீங்கள் தனியாக போக வேண்டாமென எச்சரிக்கப்படேன்.. என்னடா இது சோதனை, புத்தகம் எழுதிய படைப்பாளி கூட நிச்சயம் இத்தனை கஷ்டப்படிருப்பர்களா என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே நான் எனது வலது காலையும் கூடிக்கொண்டு செல்ல , பணப்பையை முன்னிரவு தொலைத்து விட்டதை சொல்லி புலம்பிக்கொண்டே
வந்தார் முஜுபுர்.

சில நிமிட நடையில் அப்படி ஒரு அபாயம் இருக்குமென யாரும் எதிர்பார்க்காவில்லை. ஆங்கில படங்களில் பார்ப்பது போன்ற உடைந்து, சிதைந்த ஒரு புராதான மரப்பாலம் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் கட்டிய மரப்பாலம்மாம் அது.

சிலர் உற்சாகமாய் சாகச குரல் எழுப்ப, பலர் யோசிக்க, என்னை போல சிலர் அதிர்ந்தே போய்விட்டார்கள். இடம் அறிந்து வந்திருக்க வேண்டும், தூரமும் தெரியவில்லை, இதில் எப்படி போவது என்று பல குரல்கள் .

பாலத்தின் நுழை வாயில் மட்டும் இரண்டு படிகள். இருந்தது.அதை தொடர்ந்து பக்கவாட்டில் இரும்பு கயிறும்,கீழே உருட்டு கட்டைகள் அடுக்கி அதன் மீது பலகை போடப்பட்டிருந்தது. பல இடங்களில் பலகை உடைந்திருக்க, பல இடங்களில் உருட்டு கட்டைகளை காணவில்லை. இருவர் சென்றால் பாலம் ஊஞ்சல் போல ஆடியது.. இருபது அடி உயர்த்தி இருந்தது உடைந்த அந்த புராதான பாலம்.

கீழே தண்ணீர் நுரைத்து சுளித்துகொண்டு ஓடியது. பெரும் பெரும் பாறைகள் பாசி படிந்து கிடந்தது. பாலதில்ருந்து விழுந்தால் , நீச்சல் தெரியாது என்பது வேறு விடயம். தலை பாறையில் மோதினால் , பிறகு நீச்சல் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன? பின் வருபவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் பலர் அருவி அருகே போய் விட,சிலர் பொறுப்பாய் பயந்தவர்களை கூட்டிச்சென்றார்கள்.

பாலத்திலிருந்து விழுந்து அடிபடுவதை விட ( சாவதை விடவும்) பூச்சி , சிறுத்தை வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்த அந்த படியில் உட்க்கார்ந்து கொள்ளலாமென முடிவு செய்தேன் நான் . தோழர் கம்பீரன்,காந்தி, நரன், மார்க்ஸ், சுகிர்தா, (பயத்தில் நான் கவனிக்க ,அல்லது பெயர் மறந்த சிலர் ) கண்டிப்பாக நான் போய் விடலாமென தைரியம் கூற, தோழர் செல்மாவின் நண்பர் கருணாகரன், அட வாங்கப்பா இன்பா,,மிஞ்சி போனால் மரணம் தானே என்று என்னை இழுத்துக்கொண்டு நடக்க துவங்க,(எதற்காய் இப்படி ஒரு பயணம் ) நான் ஒரு அடி எடுத்து வைக்க காலுக்கீழ் உருண்டது உருட்டு கட்டைகள்.மனசு பயத்தில் கதற, கீழே சுளித்துகொண்டு ஓடும் தண்ணீர் வேகத்தை விட வேகமாக ஓடியது எனது இரத்தம். அருவியின் சப்தத்தை விட வேகமாக கேட்டது எனது இதய துடிப்பு.

மிக ஒல்லியாக இருந்த மஞ்சு என் பக்க வாட்டில் வர, கயிற்றின் மீது நடக்கும் கூத்தாடி போல ஒரு வழியாக பாலத்தை கடந்து போய் இறங்கியவுடன், இவ்ளோதான், இதுக்கு போய் பயந்திங்களே என்று பலர் சொல்ல, திரும்பி பார்த்தால் ராஜன் குரே முகம் சிவக்க பாலத்தில் வந்து கொண்டிருந்தார். காந்தி, கம்பீரன், நரன் என பலர் அனைவரும் வரும் வரை பார்த்துகொண்டிருந்தார்கள்.

சரி, அருவி வந்துவிட்டது என நினைத்து முன்னேற எத்தனிக்கையில், மிக பெரிய வழுக்கு பாறையில் பிடிமானமின்றி நாலு காலால் தாவி கொண்டிருந்தனர் பலர். பல்லி போல பாறையை ஒட்டியபடி தவழ்ந்து மேலேறினர் சிலர்.. மிரண்டு போனோம் பலர்.

காந்தி போய் ஒரு மாற்று பாதை பார்த்து வர,பலர் அந்த பாதையில் சென்றோம்..ஒரு வழியாக மேலே சென்று அருவியை கண்டபொழுது மீண்டும் அந்த சுகம் வந்து மனசில் உட்கார்ந்தது...

அருவியிலிருந்து ஓடும் நீரில் கால் நனைய நீரில் அமர்ந்த பொழுது ஒரு ஜென்மம் அங்கு வாழ்ந்தது போல இருந்தது. அங்கு திரிந்த மந்திகளின் உற்சாகம் என்னிடமும் கொஞ்ச நேரம் தொற்றிக்கொண்டது.

ஒரு புறம் விமர்சனகூட்டம் தொடங்கியது. யாழன் புகைப்படமெடுத்து கொண்டிருந்தார்.
அனைவரும் வந்து சேர்ந்து கூட்டம் தொடங்கிய பொழுதே ,மூன்று மணிக்கு தண்ணி திறந்து விடுவோம். நீங்க இருக்குமிடமெல்லாம் நீர் வந்து விடும்மென வன அதிகாரி
ஒருவர் கூற, பாக்கி இருந்த விமர்சனங்களை தங்குமிடத்தில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது...

மீண்டும் அந்த வழுக்கு பாறை, பாலத்தில் ஒரு பயணமா? கண்டிப்பாக முடியாது என தோன்றியது.

பாலத்திலிருந்து விழுவது தானே உங்க பயம், வேறு மார்க்கம் பார்கிறேன் என்று காந்தி கூறி பாலத்திற்கு கீழே தண்ணீரில் நடந்து அந்த பாதையை கண்டு வந்தார்.

பாலம் குறித்தான பயம் உள்ளவர்கள் நீரில் கடப்பது என்று முடிவானது..காந்தி என்னை அழைத்து செல்வதாய் கூறினார். ஐந்தாண்டு திட்டம் போல திட்டம் தீட்டினோம்.. அவர் கால் வைக்கும் பாறையை பார்த்து நான் கால் வைக்கவேண்டும், வேறு எங்கும் பார்க்க கூடாது, என்று எனக்கு சொல்லப்பட்டது.எனது கையை பிடித்து கொண்டார் காந்தி.

பாசி படர்ந்து வழுக்கும் அந்த பாறைகளை பார்த்துக்கொண்டே தண்ணீரில் இறங்கினேன். ராஜன் குரே நெஞ்சளவு நீரில் தடுமாற, கைபேசிகள் தண்ணீரில் தவற விட்ட சுகிர்தா தண்ணீரில் கைபேசியை தேட, எதையும் பார்க்காமல் வாங்க என காந்தி கூறியதை தொடர்ந்து நடக்க தொடங்கினேன்.

நாங்கள் சென்ற பாதை என் இடுப்பளவு மட்டுமே தண்ணீர் இருந்தது.பல இடங்கள் வழுக்க ,சமாளித்து கரையேறி விட்டோம்.

தண்ணீரில் மிக கஷடப்பட்டவர்கள் பாலத்திலேயே போயிருக்கலாமோவென பேசிகொண்டார்கள். மீண்டும் நீண்ட தூரம் நடக்க வேண்டுமென்று உணர்ந்தாலும் இம்முறை அந்த கஷ்டம் தெரியவில்லை.

நடந்து சென்று வண்டி ஏறும்பொழுது உடைகள் காய்ந்து விட்டிருந்தது .நாங்கள் போய் வண்டியில் ஏற, இருக்கயின்றி,சுகிர்தா , மஞ்சு, காந்தி, இசை, நரன்,ஆகியோர் படியில் அமர, நானும், ராஜன் குறேவும் பக்கத்தில் உள்ள இருக்கைகளில் அமரவேண்டியிருந்ததது . ரெண்டு குண்டு ஒரே இடத்திலா என்று நான் கேட்டக்க, குண்டு சத்தமே வேண்டாமென்று இங்கு வந்தால் இங்கும் ரெண்டு குண்டா என தமிழ்நதி கேட்க்க கால் வலியை கடந்தது சிரிப்பு ஒலி..

அந்த மரண பாலம் நிச்சயம் காவு வாங்கும் என்ற எனது எண்ணம் நிஜமாகி போனது கொடுமை !!

வன பாதுகாப்பு அதிகாரிகள் இதை ஏன் முனரே சரி செய்திருக்க கூடாது?? இழப்பிற்கு பின்னரே பாலம் மூடப்படுவது ஏன்? இந்த உயிர் இழப்புகளுக்கு யார் பொறுப்பு?