Thursday, July 16, 2009

மணல்வீடு இதழ் 1(மே - ஜூன்-2008) இல் வெளியான கவிதைகள்


வெள்ளை காகிதம்
---------------------------

மேசை மேலிருக்கும்

எதுவும் எழுதபடாத

வெள்ளை காகிதம் -அதில்

ஒரே சமயத்தில் எல்லா திசைகளிலும்

பறந்து செல்லும்

வெள்ளை கொக்குகளும்

பறவைகள் ஏதுமற்ற

வெற்று வானமும் .


காட்டுத்தீ
--------------
கொளுந்துவிட்டு எரியும்

காட்டுத் தீயினுள்ளே

ஊதாநிற சமுத்திரமொன்றும்

மஞ்சள்நிற நடுமதியமொன்றும்

பருமனான ஆரஞ்சு பழமொன்றும்

உற்றுப்பார் ....

உள்ளே தெரியும் .


வெவ்வேறு மரம்
------------------------

மழை காலத்திற்கு முந்தைய மரம்

மழை காலத்திற்கு பிந்தைய மரம்

கோடை காலத்திற்கு முந்தைய மரம்

கோடை காலத்திற்கு பிந்தைய மரம்

எல்லாம் வேறுவேறு

அதன் வேர்கள் மட்டுமே ஓன்று .


வசந்த காலம்
---------------------

ஆறு மாதத்திற்கு முன்

வசந்த காலத்தில்

நான் வேறொரு ஊரில்

வேறொரு வீட்டில் வசித்தேன்

மஞ்சளும் ,சிகப்புமாய்

பூக்கள் மூடிக் கிடக்கும்

சாலையின்

இறுதியில் முடியும்

வீடாய் இருந்தது அது .

இப்போது

கோடை காலத்தில்

நிறம் மங்கிய இலைகளும்

இலைகளே இல்லாத மரங்களும்

கொண்ட சாலையின்

இறுதியில் முடியும்

( இந்த முறையும் இறுதியாக தானிருந்தது)

வீடாயிருந்தது.

இந்த இந்தஇரண்டு வீடுகளும்

ஓன்று தான் என்கிறார்கள்

நான் நம்பவில்லை .

No comments: